லாட்டரி முறையை நீக்க அமெரிக்கா முடிவு எச்1பி விசா கேட்பவர்களை தேர்வு செய்ய புதிய முறை: இனிமேல் ஊதிய அடிப்படையில் மட்டுமே கிடைக்கும்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலை செய்வதற்காக விண்ணப்பிக்கும் எச்-1பி விசாதாரர்களை தேர்வு செய்யும் லாட்டரி குலுக்கல் முறையை நீக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்வதால், அவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அதிக விசாக்களை வாங்கி வைத்துக் கொண்டு, பெரும்பாலான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுகின்றன.

இதனால்,  லாட்டரி முறையில் இந்த விசாதாரர்களை தேர்வு செய்யாமல், ஊதிய விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்யும்படி டிரம்ப் அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. இது, அமெரிக்காவின் அரசு இதழிலும் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது பற்றிய தங்கள் கருத்துகளை 30 நாட்களில் தெரிவிக்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களுக்கும், இந்த விசாவுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கும் இந்த புதிய உத்தரவு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அதிபர் தேர்தலில் வரலாறு காணாத செலவு

நவம்பர் 3ம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், இந்நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான செலவில் நடக்கிறது. இத்தேர்தலுக்கு ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யப்படுவதாக அரசியல் பார்வையாளர்களும், பொருளாதார நிபுணர்களும் கணித்துள்ளனர். 2016ல் நடந்த தேர்தல் செலவை விட இது இரு மடங்காகும். அதேபோல், அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் ரூ.7,400 கோடி வசூலித்துள்ளார்.

Related Stories:

>