×

வைரஸ் நெருக்கடி இன்னும் அப்படியே உள்ளது; அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் நெருக்கடி இன்னும் அப்படியே உள்ளது. மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்’ என்று, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா  வைரஸ் தொற்றை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரேவழி என்பது உறுதியாக தெரிகிறது. தடுப்பூசிக்காக இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் மிகத் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. உலகின் இரண்டாவது  மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியாவில், சுமார் 7 பில்லியன் டாலர் (50,000 கோடி ரூபாய்) மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசிக்கான செலவு 6 அல்லது 7 டாலர் (ரூ. 385) வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கே கொரோனா தடுப்பூசிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பே  இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை 2 டாலர் என்பதும், ஒரு நபருக்கு இரண்டு ஊசி போடவேண்டுமென்பதும், சேமிப்பு, போக்குவரத்து செலவுகளுக்காக கூடுதல் 2  முதல் 3 டாலர் வரையும் ஒதுக்கப்பட்டுள்ளது.  எனவே, ஒவ்வொரு நபருக்கும் 6 அல்லது 7 டாலர் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்து. இருப்பினும், கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து மத்திய அரசின் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால், விஞ்ஞானிகள் தொடர்ந்து தடுப்பூசி தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தடுப்பூசியின் சோதனை அடுத்தடுத்த  கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே பீகார்  சட்டமன்றத் தேர்தலில், அனைத்து பீகார் மக்களுக்கும் தாங்கள் ஆட்சிக்கு  வந்தால் கொரோனா  தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக பாஜக தனது அறிக்கையில்  அறிவித்திருந்தது. இது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகம் உட்பட பல மாநில முதல்வர்களும், தங்களது மாநில மக்களுக்கு  இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்தனர். இருப்பினும், இந்த தடுப்பூசி மத்திய அரசால்  மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் என்று பாஜக கூறியது.

இந்நிலையில், பிரதமர் ேமாடி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கொரோனா வைரஸ் நெருக்கடி, இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் இன்னும் உள்ளது. ​​இந்தியாவில் கொரோனாவுக்கான பல தடுப்பூசி சோதனைகள்  நடந்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் உள்ள ​ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும். யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று உறுதியளிக்க விரும்புகிறேன்.
மத்திய அரசு சரியான நேரத்தில் எடுத்த முடிவுகளால், மக்களின் உதவியுடன் ஏராளமான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.

ஊரடங்கு காலம் மற்றும் தளர்வுகள் நடைமுறைப்படுத்துதல் ஆகியன சரியான நேரத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் நெருக்கடி இன்னும் அப்படியே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும். திருவிழா நாட்களில் மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா சென்றுவிட்டது என்று நினைத்து ஓய்வெடுக்க வேண்டிய நேரமல்ல’ என்று தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் தடுப்பூசி கிடைக்கும்
இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன அதிகாரி பூனவல்லா தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ்  தடுப்பூசி டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவில் பயன்படுத்த தயாராக இருக்கும். கிட்டதிட்ட 100 மில்லியன் அளவிலான மருந்தையும் 2021 இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் உற்பத்தி செய்ய முடியும். எங்கள் நிறுவன  சோதனைகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைய வாய்ப்புள்ளது.

பின்னர் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படலாம். அடுத்த இரண்டு வாரங்களில், இங்கிலாந்து தங்கள் ஆய்வை தரவைப் பகிர்ந்து கொள்ளும். அது பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்டால், அடுத்த இரண்டு  மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவசரகால உரிமத்திற்கு விண்ணப்பிக்கப்படும்’ என்றார்.



Tags : virus crisis ,Modi ,Corona ,interview , The virus crisis is still intact; Corona vaccine for all: Prime Minister Modi informs in an interview
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...