×

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமையும் சோலார் பிளாண்ட்டில் டிசம்பர் முதல் மின்உற்பத்தி: ரூ2.3 கோடி மின்கட்டணம் மிச்சம்

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதி தலா ரூ500 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஸ்மார்ட் சாலை, கோட்டை அழகுபடுத்துதல், அகழி தூர்வாருதல், மழைநீர் கால்வாய் அமைப்பது, மல்டிலெவல் கார்பார்க்கிங் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான சர்க்கார் தோப்பில் 7 ஏக்கர் பரப்பளவில் சோலார் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சோலார் பிளாண்ட் பணிகள் குறித்து மாநகராட்சி பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் ரவி ஆகியோர் சோலார் பிளாண்ட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். சோலார் பிளாண்ட் மூலமாக ஆண்டுக்கு ரூ2.3 கோடி வருவாய் கிடைக்கும். வரும் டிசம்பர் மாதம் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் சீனிவாசன் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான சர்க்கார் தோப்பில் 7 ஏக்கர் பரப்பளவில் சோலார் பிளாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றிற்கு 11 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். இதன்மூலம் ஆண்டுக்கு மாநகராட்சிக்கு ரூ2.3 கோடி மின் கட்டணம் மிச்சமாகும்.

மாநகராட்சிக்கு தேவைக்கு அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் அது மின்சாரம் மின்வாரியத்திற்கு வழங்கப்பட்டு மாநகராட்சி கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது அதற்கான தொகை பெறப்படும். அதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இத்திட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க கமிஷனர் வலியுறுத்தி உள்ளார். அதன்படி வரும் டிசம்பர் மாதம் இந்த பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : plant ,Vellore , Solar plant under Smart City project in Vellore to generate electricity from December: Rs 2.3 crore electricity bill surplus
× RELATED ஆன்லைன் முறையில் தணிக்கை: மின்வாரியம் புதிய திட்டம்