×

மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய பெருமக்களுக்குத் திமுக சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை..!!

சென்னை: மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய பெருமக்களுக்குத் திமுக சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பதாவது: அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் கூறியதாவது: நபிகள் நாயகம் அவர்கள் தன் தாயின் கருவறையிலிருந்த போதே தந்தையையும், தனது 6 வயதில்  தாயாரையும் இழந்தவர். இளம் பருவத்திலேயே துயரமிகு சூழலில் அவர் வளர்ந்தாலும், பொய் இன்றி - வாக்குறுதியில் வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க தியாக சீலராக வாழ்ந்தவர். ஏழைகளின் மீது தணியாத இரக்கம்; ஆதரவற்ற அனாதைகளிடம் அன்பு மிக்க அரவணைப்பு என்பதில் முழுக்கவனம் செலுத்திய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள், “கோபம், பொறாமை, புறம் பேசுதல்” ஆகிய மூன்றையும் துறந்தவர். உயரிய நற்சிந்தனைகளை உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்காக  அர்ப்பணித்தவர். ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்” என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரர் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், அண்ணல் நபிகளாரின் அர்த்தமுள்ள போதனைகளும், அற்புதமான அறிவுரைகளும் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கருவூலங்கள். அண்ணல்  நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் உள்ளார்ந்த  பாச உணர்வுடன்,  இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு  மீண்டும் எனது  மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : MK Stalin ,dignitaries ,DMK ,Meeladun Nabi Thirunal , Miladun Nabi, Islamic People, DMK, Greetings, MK Stalin, Report
× RELATED கையடக்க CPU-ஐ உருவாக்கிய மாதவுக்கு...