நடிகர் ரஜினிக்கு ஆதரவாக இணையதளத்தில் இறங்கிய ரசிகர்கள்: டுவிட்டரில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் ஹேஷ்டாக் டிரெண்டிங்.!!!

சென்னை: சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினி வெளியிட்டதாக பரவிய அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மார்ச் மாத இறுதியில் மற்றும்  மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த பல மாதங்களாக யாரையும் சந்திக்க முடியவில்லை. கொரோனா காலத்தில் அரசியல் பிரவேசம் உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் பல விஷயங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினி வெளியிட்ட பதிவில், என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.

இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. நடிகர் ரஜினிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் இணையதளத்தில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இதனைபோல், #RajinikanthPolitics என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆகி வருகிறது. #RajinikanthPolitics ஹேஷ்டாக்  தமிழகத்தில் டுவிட்டரில் 3-வது இடத்தில் உள்ளது. #ADMKfailedChennai  ஹேஷ்டாக் தமிழகத்தில் டுவிட்டரில் 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: