நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 2031 மார்ச்-க்குள் 736 அணைகளை புனரமைக்க அரசு திட்டம்

டெல்லி: நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  2021 ஏப்ரல் முதல் 2031 மார்ச் மாதத்திற்குள் 736 அணைகளை புனரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அணைகள் பாதுகாப்பு, மற்றும் அவைகளை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தின் அடிப்படியில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 736 அணைகளை தேர்ந்தெடுத்து அந்த அணைகளை புனரமைக்கவும், வலுப்படுத்தவும், உனடியாக திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு 10,211 கோடி ரூபாய் ஒதுக்கவும்,  இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேலும் 2 முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. சணல் பயிரிடும் விவசாயிகள், மற்றும் சணல் பைகளை தயாரிப்பவர்கள் இவர்களுக்கு பலனளிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த சர்க்கரையில் 20% சணல் பைகளிலேயே மூட்டை கட்டப்பட வேண்டும் என்றும், மற்ற உணவு பொருட்களுக்கு 100% சணல் பைகளையே உபயோகப்படுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தவிர எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்களில் சேர்ப்பதற்காக எத்தனால் என்ற எரிபொருளை வாங்குகின்றன.

இது சர்க்கரை தயாரிக்கும் போது கூடவே தயாரிக்கப்படும் பொருளாகும். இதன் காரணமாக சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு பலன் கிடைக்கும். மற்றும் கரும்பு விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும் என்பதால் எத்தனாலின் விலையை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆகவே கூடுதல் விலையிலேயே எண்ணெய் நிறுவனங்கள் எத்தனாலை சர்க்கரை ஆலையிடம் இருந்து விலைக்கு வாங்கும். இந்த 3 முக்கிய முடிவுகள் இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

Related Stories: