தலைவர்கள் மிலாது நபி வாழ்த்து

சென்னை: மீலாது நபியை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி:மானுடம் தழைக்க இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்வில் ஏற்றம் பெறலாம். இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்த  இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ‘மீலாதுன் நபி’ நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.   

                                                        

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: நபிகள் நாயகம் போதனைகளின்படி அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை, எளிய மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின்  பிளவு அரசியலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அவரது கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நாம் அனைவருமே சகோதரர்கள், ஏற்றத்தாழ்வு அற்றவர்கள் என்று அரபாத் பெருவெளியில் முழங்கி, அழகிய முன்மாதிரி என அவனியோர் போற்றும் அண்ணலார் நபிகள் நாயகம் பிறந்த நாளாம்  இப்பொன்னாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வதோடு, இலாமியப் பெருமக்களுக்கு நெஞ்சினிக்கும் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் அன்பு,  நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம்  அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.

சமக தலைவர் சரத்குமார்: மிலாடி நபி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவரது வாழ்விலும் அன்பு பெருகி சகோதரத்துவத்துடன் நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றி வளமுடனும்,  நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன். நற்பண்புகள் அனைவரது உள்ளங்களிலும் மேலோங்கி, மதச்சார்பின்மை என்னும் மகத்துவக் கொள்கை கொண்ட தேசத்தில் நபிகளாரின் சீரிய கொள்கைகளை கடைபிடிக்க உறுதியேற்போம்.

இதேபோல், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், திராவிட மனித சங்கிலி  தலைவர் செங்கை பத்பநாபன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் அ.ஹென்றி, அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் பொதுசெயலாளர் எம்.ஜி.ஆர்.நம்பி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>