ஊழல் சகாப்தம் முடிந்ததாக பிரதமர் பேசிய மறு நாளே உத்தரவு: பாஜக முதல்வர் ராவத் மீது சிபிஐ விசாரணை

டெல்லி: ஊழல் சகாப்தத்துக்கு பாஜக முடிவு கட்டிவிட்டதாக பிரதமர் மோடி பேசிய மறுநாளிலேயே உத்தரகாண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆண்டு தோறும் அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி நேற்று முன்தினம் மத்திய புலனாய்வு பிரிவு ஏற்பாடு செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பான தேசிய கருத்தரங்கை காணொலி மூலம் தொடங்கி வைத்தது உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ஊழல் சகாப்தத்தை பின்னுக்கு தள்ளி நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

2016-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே இந்த மாற்றம் ஏற்பட்டதாக பெருமிதத்துடனும் கூறினார். இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீதான ஊழல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு சிபிஐ-க்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியது. 2016-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் பாஜக பொறுப்பாளராக ராவத் இருந்த போது அம்மாநில பசு பாதுகாப்பு திட்டத்துக்கு தலைவராக நியமனம் பெற அவருக்கு சவுகான் என்பவர் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உமேஷ் குமார், சிவபிரசாத், ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

மேலும் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது ராவத்துக்கு சேர வேண்டிய லஞ்ச பணமாக அவரது மனைவியின் சகோதரி சவிதா, ஹரேந்தர் சிங் ராவத் தம்பதியின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டதாக ஆதாரங்களை சமூக வைளதளங்களில் வெளியிட்டது தொடர்பான வழக்கை ரத்து செய்ய உமேஷ் குமார் கூறியிருந்தார். அதை ஏற்று உமேஷ் மற்றும் சிவபிரசாத் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உண்மை வெளிவர உதவும் என்பதால் சிபிஐ விசாரணையை முதல்வரும் வரவேற்பதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: