×

திருவெறும்பூர் அடுத்த காட்டூரில் பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் குளம்போல் தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதி

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவசால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருச்சி மாநகராட்சி 61வது வார்டுக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர், காவேரி நகர் அருகே புதியதாக விரிவாக்கப்பட்ட பகுதியில் அரசு பூங்கா அமைப்பதற்காக வீட்டுமனை பிரிக்கும் போது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்கவில்லை. இதனால் அந்த இடம் பள்ளமாக உள்ளது. மேலும் கருவேல முட்களும் மண்டி கிடக்கிறது.

அந்த பகுதியில் ஓடும் கழிவுநீரோடு மழைநீரும் சேர்ந்து தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது உள்ள கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறையில் உள்ள நிலையில், அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் கழிவுநீர் தேங்கி நிற்கும் இடம் அருகே சென்று விளையாடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுநீர் தேங்காத வண்ணம் மண்மேடு அமைத்து அந்த பகுதியில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையம் விரைவில் அமைக்க வேண்டும். அப்படி பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையம் அமைத்தால் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,forest ,park ,Thiruverumbur , Thiruverumbur, Sewerage
× RELATED மழையால் நகர் பகுதியில் கழிவுநீர் தேக்கம் கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு