மனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதம்: இன்று (அக். 29) பெரியாறு அணை ஒப்பந்த நாள்

கூடலூர்: தென்மாவட்டங்களின் பாசனம், குடிநீருக்கான ஜீவாதாரமாக கருதப்படும், பெரியாறு அணைக்கான ஒப்பந்தம் போடப்பட்டு இன்றுடன் 114 ஆண்டுகள் ஆகின்றன. இப்படி ஒரு அணையை எப்படி எல்லாம் போராடி கட்டினார்கள் என்பதை தெரிந்து கொள்வோமா? 1886, அக். 29ம் தேதி பெரியாறு அணை குறித்த ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானமும், சென்னை ராஜதானியும் செய்துகொண்டன. இருந்தாலும், கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரமுள்ள இடம், வனவிலங்குகள் நிறைந்த பகுதி, நச்சுப்பாம்புகள், ஆண்டின் பெரும் பகுதி கனமழை பெய்யும் பகுதி என்பதால், அணை கட்டுமான பணிகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.

1887, செப்டம்பர் மாதம் பெரியாறு அணை கட்டும் வேலைக்கான முதல் கல்லை நட்டார் கர்னல் ஜான் பென்னிகுக். மழைக்காலத்தில் அங்கு கட்டப்பட்ட பகுதிகள் பலமுறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அணை கட்டும் பணியைத் தொடர வேண்டாமென்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் இங்கிலாந்து சென்ற பென்னிகுக் அவருடைய வீட்டையும் பெரும் நிலப்பரப்பையும் விற்றுப் பணத்தை சேகரித்து இந்தியா வந்தார். பின் துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் அவர் ஒரு கோடைக்காலத்தின் தொடக்கத்தில் அணையின் அடித்தளத்தைக் கட்டினார்.

அதற்குப் பிறகு வந்த பருவமழை அந்த அடித்தளத்தைத் தகர்க்கவில்லை. அதன்பிறகே மதராஸ் கவர்மெண்ட் அணை கட்ட ஜான் பென்னிகுக்கிற்கு துணை நின்றது. இதனால் 1895ல் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. அன்றைய கணக்கின்படி பெரியாறு அணைக்காக மொத்த செலவு ரூ.81.30 லட்சம். மதராஸ் கவர்னர் வென்லாக் பிரபு தலைமையில் 1895, அக். 10ம் தேதி பெரியாறு அணை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அவர் ‘மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் அற்புதம்’ என பெரியாறு அணையை சிறப்பித்தார்.

இந்திய பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் பதவிக்கு வந்த முதல் இந்தியரான ஏ.வி.ராமலிங்க அய்யர், மற்றொரு பொறியாளரான ஏ.டி.மெக்கன்சி இருவரும் பென்னிகுக்குடன் பணியாற்றியவர்கள். எ.டி.மெக்கன்சி எழுதிய ‘ஹிஸ்டரி ஆப் தி பெரியாறு ரிவர் பிராஜெக்ட்’ என்னும் நூலில், அணை கட்டியது குறித்தும், பென்னிகுக்கிற்கு ஏற்பட்ட சிரமங்கள் பற்றியும் கூறியுள்ளார். அணை கட்டும் இடத்திற்குத் தேவையான பொருட்களையும், உபகரணங்களையும் கொண்டு வர ரோடு, நீர் வழி, ரோப்வே முதலிய வழிகளைப் பயன்படுத்தியுள்ளார். 90 அடி நீளமுள்ள தேக்கு மரங்களை வெட்டி யானைகள் மூலம் எடுத்து வரச்செய்து ‘ரோப்வே’ உருவாக்குவதற்கான தூண்களைப் பதித்துள்ளார். மலையிலிருந்து தேக்கடி வரை ரோப்வே அமைத்துள்ளார்.

இதில் வாளிகளைக் கட்டி விட்டு சுண்ணாம்புக்கட்டிகளைக் கொண்டு சென்றுள்ளார் 90 அடி உயரத்திலுள்ள ரோப்வேயின் தூண்களைப் பதித்தது மிகுந்த சிரமமான வேலையாய் இருந்திருக்கிறது. இதற்காக உடல் வலிமை மிகுந்திருந்த பணியாளர்களை இங்குக்கொண்டு வந்துள்ளார். அணை கட்டுவதற்காக வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தியது என்பது சாகசம் நிறைந்த வேலையாய் இருந்துள்ளது. பெரியாறு அணைக்கட்டு முகாமில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின்படி, 1892ல் 76 பேரும், 1893ல் 98 பேரும் அதற்கு அடுத்த ஆண்டு 145 பேரும், அதற்கடுத்த ஆண்டு 123 பேரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மரணமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருசிலரின் கல்லறை அணைப்பகுதியிலே உள்ளது. பெரியாறு அணை  கட்ட அக்காலகட்டத்தில் 5,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories:

>