×

கொரோனா மிரட்டல் தீபாவளி விற்பனை கைகொடுக்குமா?: எதிர்பார்ப்பில் ஜவுளி வியாபாரிகள்

கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில் இந்தாண்டு தீபாவளி ஜவுளி விற்பனையானது எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்குமா? என்ற கேள்வி வியாபாரிகளிடையே எழுந்துள்ளது. ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனையில் முக்கிய கேந்திரமாக ஈரோடு விளங்கி வருகிறது. ராயன் ரக துணிகள், கிரே காடா, ஜமக்காளம், பெட்ஷீட், துண்டு, லுங்கி உள்ளிட்ட பல்வேறு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ரயான் ஜவுளி ரகங்கள் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு டையிங் செய்யப்பட்ட பின்பு மீண்டும் ஈரோட்டிற்கு விற்பனைக்கு வருகின்றன. ரயான் தவிர மற்ற ஜவுளிகள் ஈரோட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் டெல்லி, பாம்பே, சூரத், அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுதவிர, தமிழக அரசின் பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி-சேலைகள், பள்ளி சீருடைகள் உற்பத்தியும் ஈரோட்டில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களை சந்தைப்படுத்துவதற்கு ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான அப்துல்கனி தினசரி ஜவுளி மார்க்கெட், வாரச்சந்தை, தனியார் சந்தைகள் மற்றும் மத்திய ஜவுளித்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் டெக்ஸ்வேலி நிறுவனம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜவுளி விற்பனை நடைபெற்று வந்தபோதிலும் முக்கிய சீசன் விற்பனை என்பது தீபாவளி மட்டுமே. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை களை கட்ட ஆரம்பித்துவிடும். ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலை உள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஈரோடு ஜவுளி சந்தையானது 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இதேபோல், உற்பத்தியும் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட பின் ஜவுளி சந்தை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆனாலும், வெளிமாநில வியாபாரிகள் வருகையானது மிகவும் குறைவாக உள்ளது. இதனால், மொத்த வியாபாரம் குறைவாகவும், சில்லரை வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கும் நடைபெற்று வருவதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. ஈரோட்டில் ஜவுளிகள் உற்பத்தி செய்தாலும், பெரும்பாலும் வடமாநிலங்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில், வடமாநிலங்களில் இருந்து பெறப்படும் ஆர்டர்களின் அடிப்படையில்தான் இங்கு ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. விற்பனைக்கும் வடமாநிலங்களை நம்பிதான் இருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை என்பது ஜவுளி விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தொழில் நிறுவனங்களில் ஏராளமான வேலை இழப்புகள், ஊதிய குறைப்பு, போனஸ் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதார சூழல் பாதிக்கப்பட்டு மக்களிடம் வாங்கும் சக்தியும் குறைந்துள்ளது. இதன் தாக்கம் ஜவுளி வியாபாரத்திலும் எதிரொலிக்கிறது. வடமாநிலங்களில் இருந்து ஜவுளி ஆர்டர்கள் மிகக்குறைந்த அளவில்தான் வருகிறது. இதேபோல், கேரளாவில் இருந்து 50 சதவீத ஆர்டர்கள்தான் வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் நடந்த விற்பனையை இந்தாண்டு எதிர்பார்க்க முடியாத நிலை உள்ளது.

ஆனால், அதே வேளையில் சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கிறது. வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறும் ஈரோடு ஜவுளி சந்தையில் திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், மதுரை, தேனி, கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள், ஜவுளிகளை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு தீபாவளி விற்பனையானது 60 சதவீதம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., டி.டீ.எஸ்., இ-வே பில் உள்ளிட்ட காரணங்களால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மத்திய அரசு வரி தாக்கல் முறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இதை செய்தால், உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.

ஜவுளி சந்தை பயோடேட்டா
ஈரோடு ஜவுளி சந்தையானது 1984ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இச்சந்தையில் சேலைகள், லுங்கிகள், துண்டுகள், போர்வைகள், சுடிதார்கள், உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், மேசை விரிப்புகள், கால்மிதியடிகள், கைக்குட்கள் என அனைத்து ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. வழக்கமான நாட்களில் 500 ஜவுளி கடைகளும், வாரச்சந்தை நாட்களில் 900 கடைகளும் செயல்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

புதிய டிைசன் அறிமுகம்
கடந்த ஆண்டு தீபாவளியின்போது குழந்தைகளுக்கான மோடி உடை அறிமுகப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களால் விரும்பி வாங்கப்பட்டது. இந்த ஆண்டு பெண்களுக்கான மஸ்தானி (மிடி போன்ற சுடிதார்), சராரா (பெரிய கவுன்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

Tags : Corona ,Textile traders ,Diwali , Corona, Diwali, Sales, Textile Merchants
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...