சொத்தவிளை - ஒசரவிளை இடையே 3 ஆண்டாக துண்டிக்கப்பட்டுள்ள கடற்கரை சாலை: ஓகி புயலில் ஏற்பட்ட வடு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கிய சுனாமி கடற்கரை பகுதிகளை புரட்டிப்போட்டது. இதில் பலர் பலியானார்கள். இந்த பேரிடர் வடு மாறுவதற்கு பல வருடங்கள் ஆனநிலையில், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அரபிக்கடலில் வீசிய ஓகி புயல் குமரி மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்தி நிலைகுலைய செய்தது. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் பல ஏக்கர் விவசாய பயிர்கள் சேதமானது. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்தன. முற்றிலும் நிலைகுலைந்த குமரி மாவட்ட மக்கள் மீள்வதற்கு ஒருவருடத்திற்கு மேல் ஆகியது. மீன்பிடிக்க சென்ற பல மீனவர்கள் மாயமானார்கள். இந்த புயலால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட வாழை உட்பட பல பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் பல லட்சம் நஷ்டத்தை சந்தித்தனர். நஷ்டம் தாங்கமுடியாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர்.

 ஓகி புயலால் மாவட்டத்தில் உள்ள பல சாலைகள் சேதமானது. சேதமான சாலைகளை சீரமைக்க கோரி குமரி மாவட்ட மக்கள் சாலை மறியல் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட மழையால் மாவட்டத்தில் உள்ள மாநில சாலைகளின் தடுப்புசுவர்கள், சிறிய பாலங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. இதுபோல் கடற்கரை கிராமங்களில் உள்ள சாலைகளும் பல துண்டிக்கப்பட்டன. குமரி மாவட்டத்தில் உள்ள இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளும் சேதமானது. நெடுஞ்சாலைத்துறையின் கீழ் வரும்  சாலைகளை சரிசெய்ய அப்போது ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டது. இதனை கொண்டு சாலையின்  தடுப்புசுவர்கள், சிறியபாலங்கள் அமைக்கப்பட்டது. ஓகி புயல் சேதத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையால் முடிக்கப்பட்டது.  இதுபோல் தேசிய நெடுஞ்சாலைகளும் சீரமைக்கப்பட்டது.

குறிப்பாக சொத்த விளைக்கும் மணக்குடிக்கும் இடையே சொத்தவிளையில் இருந்து ஒசரவிளை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை சாலையை கடலலை விழுங்கியது. இந்த சாலையை சீரமைக்க கோரி மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு கண்டுக்கொள்ளவில்லை. இந்த சாலை ஊரகவளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிராம சாலையாகும். கடலரிப்பால் சேதமான அந்த சாலையை சரிசெய்ய அப்போது ரூ.9 கோடி அளவிற்கு செலவு ஆகும் என மாவட்ட நிர்வாகம் கருத்துரு அனுப்பியது. ஆனால் பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது.

அதன் பின்பு கடல் சீற்றம் இருக்கும்போது மேலும் சாலை அரிக்கப்பட்டு மிகவும் சேதமாகி தற்போது ஒரு சில இடங்களில் சாலை இருந்த அடையாளமே இல்லாமல் ஆகியுள்ளது.  இதனால் கன்னியாகுமரியில் இருந்து சொத்தவிளைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒசரவிளை ஊருக்குள் சென்று பின்பு சொத்தவிளை வருகின்றனர்.  மணக்குடி சொத்தவிளை சாலை துண்டிக்கப்பட்டு வாகன போக்குவரத்து இல்லாததால் கன்னியாகுமரியில் இருந்து ெசாத்தவிளைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் சொத்தவிளை, சங்குதுறை பீச் ஆகிய சுற்றுலா தலங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை கிராமங்களையும்  ஒருங்கிணைத்து அரசு போக்குவரத்துகழகம் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை அரசு பஸ் ஒன்றை இயக்குகிறது. இந்த பஸ் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை கடற்கரை ஒட்டியுள்ள சாலையிலேயே சென்று வந்தது. ஓகி புயலுக்கு பிறகு சொத்தவிளைக்கும் ஒசரவிளைக்கும் இடையே சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் மணக்குடியில் இருந்து மேற்கு கடற்கரை சாலை வழியாக அன்னைநகர் வந்து மீண்டும் கடற்கரை சாலை வழியாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. மணக்குடிக்கும் சொத்தவிளைக்கும் இடையே உடைந்துள்ள சாலையை சரிசெய்து சொத்தவிளை, சங்குதுறை பீச் ஆகிய சுற்றுலா தலத்தை மேம்படுத்தவேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதிக செலவு ஆகும் சாலையை சீரமைப்பது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: சொத்தவிளை மணக்குடி சாலை பிரதமர் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் போடப்பட்டது. ஓகி புயலின் போது இந்த சாலை சேதமானது. தொடர்ந்து சேதமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. மேலும் கடல் சீற்றத்தால் சாலை மிகவும் சேதமாகியுள்ளது. இந்த சாலையை சீரமைக்க, தூண்டில் வளைவு அமைப்பதுபோல் கற்களை அடுக்கி பின்னர் சாலை அமைக்கவேண்டியுள்ளதால் அதிக செலவு ஆகும். இதனால் இந்த சாலையை ஊரக வளர்ச்சித்துறையால் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பேரிடர் மேம்பாட்டு நிதியில் அமைக்க முடிவு செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

நடவடிக்கை இல்லை

ஆஸ்டின் எம்எல்ஏ கூறியதாவது: வளர்ந்து வரும் சுற்றுலாதலமான சொத்தவிளை பீச் அரசின் நடவடிக்கையால் அழிந்து வருகிறது. 20 வருடத்திற்கு முன்பு சொத்தவிளை கடற்கரை பகுதி சுற்றுலா தலமாக மாற்றும் வகையில் வேகமாக வளர்ச்சி பணிகள் நடந்தது. அலங்கார காட்சி கோபுரங்கள், சிறுவர் பூங்காக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கப்பட்டு வந்த நிலையில் அரசு தொடர்ந்து இந்த சுற்றுலாதலத்தை பராமரிக்கவில்லை. குறிப்பாக கடந்த 2017ம் வருடம் ஓகி புயலின்போது சொத்தவிளைக்கும் ஒசரவிளைக்கும் இடையே கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு கடல் அரிப்பால் சாலை மிகவும் சேதமாகியுள்ளது.

சேதமான இந்த பகுதியில் கடலரிப்பு தடுப்புசுவர் அமைத்து மீண்டும் சாலை அமைக்க  3 ஆண்டுகாலமாக சட்டமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். இதுபோல் மாவட்ட ஆட்சியரிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. மேலும் குமரி மாவட்ட சிறப்பு அதிகாரி ஜோதிநிர்மலாவிடம் கோரிக்கை மனு கொடுத்தும் சாலை சீரமைக்கவில்லை. இதனால் கடலரிப்பால் துண்டிக்கப்பட்ட ஒசரவிளை சொத்தவிளை சாலையை சீரமைக்கவேண்டும். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சொத்தவிளை, மணக்குடி எக்கோ பார்க், சங்குதுறை பீச் ஆகியவற்றை பராமரித்து சுற்றுலா வளர்ச்சியை மேற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>