தனக்காக வீட்டையே மாற்றிய ரசிகருக்கு நன்றி தெரிவித்த டோனி: சமூகவலைதளத்தில் வீடியோ வைரல்: மகிழ்ச்சியில் திட்டக்குடி ரசிகர்

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். இவர் துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான கோபிகிருஷ்ணன் கிரிக்கெட் வீரர் தோனி மீது மிகுந்த அன்பு கொண்டு உள்ளார். டோனி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஆர்வத்தோடு கண்டுகளித்த கோபிகிருஷ்ணன் தற்போது விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். டோனி மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்து சிஎஸ்கே அணியின் நிறமான மஞ்சள் நிறத்தை தனது வீடு முழுவதும் வண்ணமாக பூசியதோடு, டோனி படத்தினையும்  சுவரில் வரைந்துள்ளார். வீட்டின் முகப்பு பகுதியில் ஹோம் ஆப் டோனி ஃபேன் என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.

டோனிக்காக மாற்றி அமைக்கப்பட்ட இந்த வீட்டினை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தும், சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவியது. இந்நிலையில் அந்த ரசிகருக்கு டோனி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி கூறியிருப்பதாவது, இது எனக்காக மட்டுமல்ல. சிஎஸ்கேவின் ரசிகர்களின் பலத்தை காட்டுக்கிறது. சிஎஸ்கே ரசிகர்கள் எங்களுக்கு அளிக்கும் ஆதரவு அனைவருக்கும் தெரியும். இது மிக எளிதான விஷயம் அல்ல. அவரின் மொத்த குடும்பமும் இதற்கு சம்மதிக்க வேண்டும். அதன் பிறகுதான் நீங்கள் அதை செய்ய முடியும். சமூக வலைதளங்களில் போடும் பதிவை போன்றது அல்ல. இது எப்போதும் நிலைத்திருக்கும். அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சமூகவலைதளத்தில் வெளியானதை அடுத்து கோபி கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>