×

தொப்பூர் அருகே 15ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு

தர்மபுரி: தொப்பூர் அருகே, 15ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால நடுகற்கள் கண்டு பிடிக்கபட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உம்மியம்பட்டி கிராமத்தில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் சந்திரசேகர், சென்னை தொல்லியல் துறை உதவி தொல்லியலாளர் ரமேஷ் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இளந்திரையன், ஆய்வு மாணவர்களான சீனன், இம்ரான், கிருபானந்தன் ஆகியோர் இக்கள ஆய்வை மேற் கொண்டனர். இதில், நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு கல்லூரி வரலாற்று உதவி பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது: உம்மியம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் அமைந்துள்ளன. அதாவது கிபி 15 அல்லது 16ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. முதலாம் நடுகல்லில் ஒரு போர் வீரனின் உருவம் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.

அவன் ஒரு கையில் மிக நீண்ட வாளும், மற்றொரு கையில் குறுவாளும் உள்ளது. மேலாடையின்றி கால் சட்டை மட்டும் அணிந்துள்ளான். தலையில் ரிப்பன் போன்ற துணியால் முடி சேர்த்து கட்டப்பட்டு, கொண்டை போல தலையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மீசை மிகப்பெரியதாக மேல் நோக்கி முறுக்கி விட்டுள்ளது. மிகப்பெரிய தாடி வளர்த்து உள்ளது போல கட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து 50 அடி தொலைவில், மேலும் இரு நடுகற்கள் உள்ளன. இவற்றில் ஒரு நடுகல் பகுதியாக உடைக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு போர்வீரன் உடைய உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வீரனின் இடது கையானது ஒரு மிக நீண்ட ஈட்டியை மார்பு பகுதியிலிருந்து இடுப்புவரை உள்ளவாறு பிடித்தும், மறுகையில் குறுவாள் ஒன்று மேல் நோக்கியவாறும் கட்டப்பட்டுள்ளன. மல்யுத்த வீரர்கள் அணிவது போன்ற மிகச்சிறிய அளவிலான கால்சட்டை காணப்படுகிறது. இதன் அருகிலேயே உள்ள மற்றொரு நடுகல்லில், வீரன் ஒரு கையில் மிக நீண்ட வாளும், மறுகையில் கேடயத்தை கொண்டு மார்பு பகுதியை மறைத்தவாறும் உள்ளது.

நடுகல்லில் காணக்கூடிய அந்த கச்சையில் இருந்து ஒரு துணி கால் வரை நீண்டு அலங்காரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பறவைகளை நடுகற்களில் வடிவமைக்க கூடிய பழக்கமானது நாயக்கர் காலத்தில் இருந்தது. இதனை இனக்குழுவின் அடையாளமாகவும் கருதலாம். எனவே, இப்பகுதியில் நாயக்கர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த காலகட்டத்தில் சிறு பூசல் ஏற்பட்டு, இம்மூன்று வீரர்களும் இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதியமானுக்கு உதவி புரிவதற்காக குறும்பு எனும் படைப்பிரிவில் குறுமன்ஸ் இன மக்கள் இருந்ததற்கான சங்க கால இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.

அதுபோல நாயக்கர் காலத்திலும் இப்பகுதியைச் சேர்ந்த குறுமன்ஸ் இன மக்கள், நாயக்கர்களிடம் சிறு படை தளபதிகளாகவோ அல்லது ஊர் தலைவர்களாகவோ இருந்து, பூசலில் உயிரிழந்து இருக்கலாம். எனவே, இந்நடுகல் குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் நடுகல்லாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு பேராசிரியர் சந்திரசேகர் கூறினார்.

Tags : Toppur , Toppur, mediators, invention
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...