×

மலையேற்றம், மூலிகை சுற்றுலா மையம், எக்கோ டூரிசம்: குற்றாலத்தில் ஆண்டு முழுவதும் சுற்றுலா திட்டம்: கேரளாவை போன்று மாறுமா?

தென்காசி:  குற்றாலத்தில் அருவி  குளியலை மட்டும் நம்பியிருக்காமல் கேரள மாநிலத்தை போன்று மூலிகை சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, எக்கோ  டூரிசம், மலையேற்ற சுற்றுலா, வாட்டர் தீம் பார்க், ஆன்மீக சுற்றுலா என  பல்வகை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆண்கள், பெண்கள்,   குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு தமிழக மக்களின் மனம் கவர்ந்த  சுற்றுலாத் தலமாக குற்றாலம் திகழ்கிறது. ஆண்டுதோறும் 60 லட்சத்திற்கும்  அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். காலம்,  காலமாக குற்றாலத்தில் அருவி குளியலை மட்டுமே பிரதானப்படுத்தியதால் தற்போது  உலகம் எதிர்கொண்ட பேரழிவு நோயான கொரோனா காலத்தில் குற்றாலம் முற்றிலும்  முடங்கி விட்டது. நோய்த்தொற்று ஊரடங்கு  தளர்வுகளின் போது ஒவ்வொரு துறையாக மீண்டு வந்த போதும் மார்ச் மாதம் 24ம்  தேதி முதல் இன்று வரை குற்றாலம் மட்டும் ஊரடங்கிலிருந்து மீளவில்லை. அருவி  குளியலை மட்டுமே குற்றாலத்தில் பிரதானப்படுத்தியது தான் இதற்கு காரணம்.  

தற்போது நீர்நிலைகளில் மக்கள் கூட்டமாக குளிப்பது நோய்த்தொற்று பரவுவதற்கு  ஒரு காரணியாக அமைந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக அருவிகளில் தண்ணீர்  ஆர்ப்பரித்து விழுந்த சமயங்களில் கூட சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க  அனுமதிக்கப்படவில்லை. இதனால் களைகட்டி காணப்படும் குற்றாலம் தற்போது  வெறிச்சோடி களை இழந்து விட்டது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற  சுற்றுலாத்தலங்கள் குளிர்ச்சிக்காக மட்டுமே சுற்றுலாப் பயணிகளால்  விரும்பப்படுகிறது. ஆனால் குற்றாலம் நீர்வீழ்ச்சிகளுக்காக மட்டுமல்லாது மனதுக்கு  உற்சாகம் அளிக்கும் தென்றல் காற்றுக்காகவும் அனைத்து தரப்பினராலும்  விரும்பப்படுகிறது. அருவி குளியல் மட்டுமல்லாது இத்தகைய தென்றல்  காற்றுக்காகவும் பலர் குற்றாலத்திற்கு வருகை தருகின்றனர். ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே  குற்றாலத்திற்கு செல்லமுடியும் என்ற மனநிலை சுற்றுலாப் பயணிகள் மத்தியில்  மனதில் விதைக்கப்பட்டு விட்டது.

இன்றைய சூழலில் உலகில் மருத்துவம்  கூட சுற்றுலாவாக உருவெடுத்து விட்டது. இயற்கை ஆயுர்வேத மூலிகைகள் மூலம்  மசாஜ் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் கேரளா போன்ற மாநிலங்களிலும், பல நாடுகளிலும் வருவாய்  ஈட்டித் தரக்கூடிய சுற்றுலாவாக உருவெடுத்துள்ளது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் சீசன் காலங்களுக்கு அப்பாற்பட்டு ஆண்டு முழுவதும் சுற்றுலாப்  பயணிகள் வந்து செல்லும் வகையில் வாட்டர் தீம் பார்க், எக்கோ டூரிசம் என்று  அழைக்கப்படும் சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவையும் பிரபலமடைந்துள்ளது.  மலையேற்றம் என்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைவராலும் விரும்பி  மேற்கொள்ளப்படும் ஒரு உடற்பயிற்சி சுற்றுலாவாக உள்ளது. இதற்கு சீசன் காலம்  என்பது இல்லை. மழைக்காலம் தவிர்த்து மற்ற சமயங்கள் மலையேற்றம் மேற்கொள்வது  உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிக்கும் சுற்றுலாவாக பலராலும்  விரும்பப்படுகிறது.

மேலும் படகு சவாரியை ஆண்டு முழுவதும்  மேற்கொள்ளும் வகையில் திட்டம் தீட்டலாம். மூலிகை வளம் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மூலிகை வளம் மற்றும்  அதன் பயன்களை அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டு முழுவதும் மூலிகை கண்காட்சி  நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதும் குற்றாலம் பகுதி மக்களின்  விருப்பமாக உள்ளது. குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயில் மிகவும்  பழம்பெருமை வாய்ந்த பாடல் பெற்ற திருத்தலமாகும். இங்கு  நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் ராஜகோபுரம் கட்டும் பணியை துவக்கி  ஆண்டின் பல மாதங்களில் இங்கு நடைபெறும் திருவிழாக்களை பிரபலப்படுத்துவதன்  மூலம் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் மாற்ற முடியும். பொற்சபை, வெள்ளியம்பலம்,  கனகசபை, தாமிரசபை என பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திர சபையை மேலும் பிரபலப்படுத்த முடியும்.  

குற்றாலத்தை பல்வகை  சுற்றுலாத்தலமாக மாற்றுவதன் மூலம் குற்றாலம் மட்டுமின்றி தென்காசி  மாவட்டத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் உயர்வடையும். இனியும் குற்றாலத்தில்  அருவி குளியலை மட்டுமே பிரதானப்படுத்தாமல், ஆண்டு முழுவதும் சுற்றுலா  பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வகையில் பல்வகை சுற்றுலாக்களை  ஊக்குவிக்க சுற்றுலாத்துறையும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பது குற்றாலம் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.


Tags : Herbal Tourism Center ,Eco Tourism: Courtallam ,Kerala , Courtallam, tourism, planning
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...