அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்க இழுத்தடிக்கும் ஆளுநர்: மனசாட்சியுடன் நடந்து கொள்ளங்கள் என நீதிபதிகள் வேண்டுகோள்!!

மதுரை : மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தேர்வு முடிவுகளும் வெளியாகிய நிலையில், உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இதையடுத்து மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதற்கு பதிலளித்த ஆளுநர், 7.5 % உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் தேவை தேவை என தெரிவித்துள்ளார்.இந்நிலையில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  

அப்போது நீதிபதிகள் கூறியதாவது, “7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் மனசாட்சியுடன் நடக்க வேண்டும். பல ஆலோசனைக்குப் பிறகே சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் பல கோணங்களில் ஆலோசித்து முடிவெடுத்த இந்த மசோதா குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு மேலும் அவகாசம் தேவையா?. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் உருவான மசோதாவுக்கு ஒப்புதல் தர அவகாசம் கேட்பது விசித்திரமானது. அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஏழை எளிய மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொள்வதும் அவசியமானது. பிற மாநிலங்களில் நீட் முடிவு வெளியான பின்பு என்ன நிலை உள்ளது. கர்நாடகாவில் இதுபோல அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா என்பதை அரசு வழக்கறிஞர்கள் உறுதி செய்ய வேண்டும். என்று தெரிவித்தனர்.

Related Stories: