மருத்துவ தகவல்கள் அனைத்தும் உண்மை: சமூக வலைதளங்களில் பரவிய அறிக்கை என்னுடையது அல்ல...நடிகர் ரஜினி டுவிட்.!!!

சென்னை: சமூக வலைதளங்களில் பரவிய நடிகர் ரஜினி காந்தின் அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினி வெளியிட்டதாக பரவிய அறிக்கையில், மார்ச் மாத இறுதியில் மற்றும்  மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த பல  மாதங்களாக யாரையும் சந்திக்க முடியவில்லை.

2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் சிறுநீரக பாதிப்பும், 2016-ல் அமெரிக்காவில் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு தொற்று  உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத்  தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை இந்த வருட இறுதி மாதமான டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு என்பது உட்பட இன்னும் பல விஷயங்கள் குறித்து அந்த அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினி வெளியிட்ட பதிவில், என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>