×

போடியில் 53 ஆண்டு பழமையான வாட்டர் டேங்க் பழுது: புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி தீவிரம்

போடி: போடியில் 53 ஆண்டுகள் பழமையான மேல்நிலை தொட்டி சேதமடைந்ததால், புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் பொட்டல்களம், துரைராஜபுரம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு உப்புக் கோட்டை முல்லைப் பெரியாற்றில் உறை கிணறுகள் அமைத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக குடிதண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் 7 மேல்நிலை தொட்டிகளில் குடிதண்ணீர் நிரப்பப்பட்டு ஒவ்வொரு வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் ஏற்கனவே மீனாட்சிபுரத்திற்குள் ஊரின் நுழைவாயிலில் 1967ம் ஆண்டு பேரூராட்சி சார்பில் தரையில் குடவுன், முதல் மாடியில் அலுவலகம், அதற்கு மேல் இரண்டாவது தளத்தில் மேல் நிலை தண்ணீர் தொட்டியும் சேர்த்து ஒருங்கே கட்டி துவக்கப்பட்டது.இந்த அலுவலகம் இடைஞ்சலாக இருப்பதால் நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பொட்டல் களம் சாலையில் கடந்த திமுக ஆட்சியில் புதிய அலுவலகம் கட்டி மாற்றி அமைக்கப்பட்டது.தற்போது அந்த அலுவலகம் நூலகமாக இயங்கி வருகிறது. 30 ஆயிரம் லிட்டர் மேல் நிலைத் தொட்டி பழுது ஏற்பட்டதால் குடிநீர் கசிவு ஏற்பட்டு கட்டிடம் படுமோசமாக மாறிவிட்டது.

எப்போதும் சாயும் என்ற அபாய நிலை நிலவுகிறது.கசிவு அதிகரித்ததன் காரணமாக குடிநீர் நிரப்புவது நிறுத்தப்பட்டு பயனற்று கிடக்கிறது.
மாற்று திட்டமாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி 20 அடி உயரத்தில் கட்டுவதற்கு பேஸ் மட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல் துரைராஜ்புரம் காலனியில் 20 அடி உயரம் கொண்ட மேல்நிலை தொட்டி கட்டும் பணி ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

Tags : Bodi , Bodi, antique water tank, repair
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்