×

கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், கலப்பு திருமண தம்பதியருக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் : ஒடிசா அரசு சபாஷ் அறிவிப்பு!!

புபனேஸ்வர் : கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், கலப்பு திருமண தம்பதியருக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஒடிஷா அரசு அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமூகத்தில் சாதி வேறுபாடுகள் இன்றி சமத்துவத்தை ஏற்படுத்த ஒடிஷா மாநில அரசு கலப்பு திருமணங்களை ஊக்குவித்து வருகிறது. அதாவது, கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருக்கு ஒடிசா அரசு சன்மானம் வழங்குகிறது.

கடந்த 2007ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்து கொள்வோருக்கான தொகை 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக ஒடிஷா அரசு உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு சன்மானம் 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக Sumangal.odisha.gov.in என்ற பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது எஸ்.டி மற்றும் எஸ்.சி மேம்பாடு, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திருமணங்கள் சமூக நல்லிணக்கத்தை பேணும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:

* இந்து மேல் சாதி மற்றும் இந்து தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடையில் திருமணம் நடைபெற வேண்டும்.

* இந்த திருமணம் இந்து திருமணச் சட்டம் 1955ன் படி செல்லுபடியாக வேண்டும்.

* இந்த சன்மானம் திருமணமான தம்பதிக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

* முதல்முறை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே அரசின் சன்மானம் கிடைக்கும்.

* கணவன் இறந்து விதவையான மனைவி அல்லது மனைவி இறந்து தனிமையில் வாழும் கணவன் மறுமணம் செய்து கொண்டால் இத்தகைய சன்மானம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : couples ,Odisha Govt , Mixed Marriage, Government of Odisha, Sabash, Announcement
× RELATED தாம்பரத்தில் பரபரப்பு; ஏலச்சீட்டு...