கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி.!!!

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை காலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகம் மூலமாக பல கோடி மதிப்புள்ள  தங்கத்தை கடத்திய சொப்னா கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சொப்னாவுடன் கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததால், விசாரணை வளைத்தில் அவரும் சிக்கினார். சுங்க இலாகா, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து, நேற்று காலை சிவசங்கரின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு வெளியான ஒரு சில நிமிடத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள்,  சிவசங்கர் சிகிச்சை பெற்று வந்த திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். சிவசங்கரின் உடல்நிலை குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, சிவசங்கர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து, அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்து காரில் கொச்சிக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான சிவசங்கரனை 14 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை கேரள உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. இருப்பினும், சிவசங்கரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிவசங்கரிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள சட்டசபைக்கு  இன்னும் 6 மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் சிவசங்கரனை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துள்ளது ஆளும் இடதுசாரி அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>