உலகம் முழுவதும் சுரா மீன்கள் அதிகம் வேட்டை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ரூ.16.5 மதிப்புள்ள 23.5 கிலோ சுரா துடுப்புகள் பறிமுதல்

சென்னை : சென்னையிலிருந்து துபாய்க்கு கடல் உயிரின பொருட்கள் கடத்தப்படுவதாக, சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கடத்தல்காரர்களை பிடிக்க, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று தீவிர கண்காணிப்பில் இறங்கினர். அப்போது பயணிகள் புறப்பாடு முனையத்தில், இரண்டு பயணிகள் கையில் அட்டை பெட்டியுடன், சந்தேகிக்கும் வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு சோதனைக்கு சென்ற அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சென்னையைச்  சேர்ந்த சதக்கத்துல்லா(52), திருச்சியைச் சேர்ந்த அப்பாஸ்(29) ஆகியோர் பிளை துபாய் விமானம் மூலம் துபாய் செல்ல தயாராக இருந்தனர். பெட்டியில் இருக்கும் பொருட்கள் குறித்து அவர்கள் மழுப்பலான பதில் அளித்தனர். இதனால் அந்த பெட்டியை பரிசோதனை செய்தபோது, அதில் 3 வெள்ளை நிற சாக்கு பைகள் இருந்தன. அதில் ஒன்றில் 9.5 கிலோ எடையில் சுரா துடுப்புகளும், மற்ற 2 சாக்கு பைகளில் 14 கிலோ சுரா துடுப்புகளும் இருந்தன.

அவை பதப்படுத்தப்பட்ட சுரா துடுப்புகள் என வனவிலங்கு குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதி செய்தனர். வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் கீழ் இவை தடை செய்யப்பட்ட பொருட்கள். இவற்றின் மதிப்பு ரூ.16.5 லட்சம். சுங்கச் சட்டத்தின் கீழ் இந்த சுரா துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.வெளிநாட்டு நட்சத்திர விடுதிகளில் சுரா துடுப்பு சூப் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதை செழிப்பின் அடையாளமாகவும், ஆரோக்கியம் தரக் கூடியவை எனவும் சீனர்கள் கருதுகின்றனர். இதற்காக உலகம் முழுவதும் சுரா மீன்கள் அதிகம் வேட்டையாடப்படுவதால், அதன் இனம் அழிந்து வருகிறது.இந்த கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது என சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>