×

இளம் வக்கீல்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் முதல்வர் துவக்கி வைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில், 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, 9 இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகைக்கான ஆணையினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர், இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும்.

கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப் படிப்பினை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ள இயலாமல் வேறு மாற்றுத் தொழிலுக்கு சென்று விடும் நிலையும் உள்ளது. இந்நிலையினை கருத்தில் கொண்டு, வறுமையான நிலையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் வகையில், தகுதிகளின் அடிப்படையில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் 2 ஆண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படும் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்கள் பயன்பெறும் வகையில், 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் நேற்று 9 இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சண்முகம், தலைமைச் செயலாளர் சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார், சட்டக் கல்வி இயக்குநர் சந்தோஷ் குமார், பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் இணை தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ராஜகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,lawyers ,Government of Tamil Nadu , Chief Minister launches Rs 3,000 grant scheme for young lawyers: Government of Tamil Nadu
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...