யாகசாலை பூஜையுடன் தேவர் குருபூஜை விழா பசும்பொன்னில் துவக்கம்: எடப்பாடி, மு.க.ஸ்டாலின் நாளை வருகை

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான நேற்று காலை ஆன்மிக விழா நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தலைமையில் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், லட்சார்ச்சனை நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து பசும்பொன் வந்திருந்த பொதுமக்கள் சாமி கும்பிட்டு சென்றனர். உள்ளூர் பகுதியிலிருந்து பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பாஜ முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்தார். விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை பசும்பொன் வருகிறார். இதற்காக நினைவிட பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்களும் விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்துகின்றனர். ஒரே விமானத்தில்: தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6.15 மணிக்கு ஒரே விமானத்தில் மதுரை வருகின்றனர். பசும்பொன் கிராமம் ட்ரோன் மூலமும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், மோப்ப நாய்கள் உதவிகளுடன் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக அன்னதானம் நடத்த அனுமதியில்லாததால் பந்தல் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: