இந்தி அல்லது ஆங்கிலத்தில் கேட்டு தமிழில் எழுதிய கோரிக்கை மனுவை திருப்பி அனுப்பிய மத்திய அமைச்சகம்

பண்ருட்டி: கடலூர் செம்மங்குப்பத்தில் சைமா சாயப்பட்டறை தொழில் திட்டத்துக்கு சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சி எடுத்து செல்வதை தடை செய்யக்கோரி பண்ருட்டி தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து கடந்த 8ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்துக்கு புகார் மனு அனுப்பினார். மனுவை தமிழில் இருந்ததால் அதிகாரிகள் புகார் செய்த சிவக்கொழுந்துவுக்கு கடந்த 16ம் தேதியிட்டு இந்தி அல்லது ஆங்கிலத்தில் மனுவை எழுதி அனுப்புமாறு கூறி திருப்பி அனுப்பினர். இதுகுறித்து சிவக்கொழுந்து கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் தமிழிலேயே பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கும், பிரச்னை குறித்து தமிழில் பேசவும் அனுமதியளிக்கும்போது தமிழில் எழுதிய மனுவுக்கு பாகுபாடு காட்டி திருப்பி அனுப்பப்படுவது தமிழகத்தையும், தமிழ் மொழியையும் அவமதித்து கோரிக்கைகளை நீர்த்துபோக செய்யும் சதிதிட்டம். எனவே துறை அதிகாரிகள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: