மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு அறிவிப்பு சண்முகம் சுப்பையா நியமனத்துக்கு எதிர்ப்பு: தமிழக எம்பிக்கள் புறக்கணிப்பு

மதுரை: மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வி.எம்.கடோச்சை தலைவராக நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக எம்பிக்களை நியமிக்காமல் புறக்கணித்துள்ள நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் சண்முகம் சுப்பையா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதுரை, தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து, அதற்கான முன்னோட்ட பணிகளான சுற்றுச்சுவர், சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணை வேந்தர் சுதா சேஷய்யன், ஜோத்பூர் எய்ம்ஸ் பேராசிரியர் பங்கஜ் ராகவ், சரோஜினி நாயுடு மருத்துவகல்லூரி அறுவை சிகிச்சை நிபுணர் பிரசாந்த் லாவண்யா மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் சண்முகம் சுப்பையா உள்பட 13 பேர் இடம்பெற்றுள்ளனர். 7 பிரிவுகளாக தகுதிகளின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4வது பிரிவில் ஓரிடமும், 7வது பிரிவில் எம்பிக்களுக்கான 3 இடமும் காலியாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் இந்த குழுவில் இடம்பெறாத வகையில் காலியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதில், சண்முகம் சுப்பையா நியமனத்துக்கு கடும் எதிரப்பு எழுந்துள்ளது. பாஜவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் நிர்வாகியான இவர், தான் குடியிருக்கும் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வீட்டு வாசலில் குப்பை கொட்டி, சிறுநீர் கழித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நியமனத்தை எதிர்த்து வைகோ தனது அறிக்கையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குழுவில், சண்முகம் சுப்பையா  என்பவரை உறுப்பினராக, மத்திய அரசு அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. இவர், கார் நிறுத்த இடப் பிரச்னைக்காக, அண்டை வீட்டுச் சுவரில் அசிங்கத்தை செய்து அடாவடி செய்ததாக, சமூக வலைதளங்களில் காணொலிகள்  வெளியாகின. 62 வயதுப் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக, இவர்  மீது, காவல்துறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு  பண்பாடு அற்ற முறையில் நடந்துகொண்ட இவரை, இயக்குநர் குழுவில் இடம் பெறச்  செய்து இருப்பது, எய்ம்ஸ் என்ற உயர்ந்த மருத்துவ நிறுவனத்தின் மதிப்பைக்  குறைக்கின்ற செயல் ஆகும். மதுரை எய்ம்ஸ் இயக்குநர்கள் குழுவில் இருந்து சண்முகம் சுப்பையாவை  நீக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன், தனது முகநூல் பதிவில், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சண்முகம் சுப்பையாவை நியமித்திருப்பது, அவரது இழிவு செயலுக்காக கொடுக்கப்படும் பரிசாக உள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகர் காங். எம்பி மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை கமிட்டி உறுப்பினராக சண்முகம் சுப்பையா நியமனம் என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதற்காக வழங்கப்பட்ட பதவி. மத சார்புள்ளவரும், பெண்களை இழிவுபடுத்தியவருமான சண்முகம் சுப்பையா நியமனத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இது தான் மனுசாஸ்திரத்தின் வழி ஆட்சியோ?’’ என தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மத்திய பாஜவின் மாணவர் அமைப்பின் தமிழக தலைவராக உள்ள ஒழுக்கக் கேடான ஒருவரை மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அவரை நிர்வாகக் குழுவில் இருந்து உடனடியாக விலக்கவில்லை எனில் கடுமையான போராட்டத்தை தமிழக மாணவர் காங்கிரஸ் நடத்தும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இதுதவிர, சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் பலரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உறுப்பினராக டாக்டர் சண்முகம் சுப்பையா நியமனத்தை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Stories: