×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 80 லட்சமாக உயர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம்  நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. நேற்று முன்தினம் ஒருநாள் பாதிப்பு 36 ஆயிரமாக இருந்த நிலையில், நேற்று மீண்டும் 40 ஆயிரத்தை  தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 893 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 79  லட்சத்து 90 ஆயிரத்து 322 ஆக அதிகரித்தது.  இதே போல கடந்த 24 மணி நேரத்தில் 508 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1  லட்சத்து 20 ஆயிரத்து 10 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நோய் தொற்று பாதித்தவர்களில் 72 லட்சத்து 59 ஆயிரத்து 509 பேர் சிகிச்சையில்  குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் 6 லட்சத்து 10 ஆயிரத்து 803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  தொடர்ந்து 6வது நாளாக 7 லட்சத்திற்கும் குறைவாக இருந்து வருகிறது. குணமடைவோர் விகிதம் 90.85  சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல இறப்பு விகிதமும் 1.50 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதற்கிடையே, மாநில அரசுகளின்  புள்ளிவிவரங்களின்படி நேற்றிரவு இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது. மாநில அரசுகள் தரும் புள்ளி விவரங்களை  புதுப்பித்து, இத்தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று உறுதிபடுத்தும். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி 20  லட்சத்தையும், ஆகஸ்ட் 23ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5ம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16ம் தேதி 50 லட்சத்தையும், செப்டம்பர் 28ம்  தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11ம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைவதால், 17 நாட்களுக்குப் பிறகு 80  லட்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதிக்கு பாசிட்டிவ்
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் நேற்று தனது டிவிட்டரில்  பதிவிட்டார். ‘‘எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி உள்ளது. என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்  கொள்கிறேன்’’ என ஸ்மிருதி இரானி கூறி உள்ளார். இதுவரை பல மத்திய அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமித்ஷா, நிதின்  கட்கரி, தர்மேந்திர பிரதான், அர்ஜூன் ராம் மேக்வால், கஜேந்திர சிங் செகாவத், பத் நாயக், பிரகலாத் ஜோஷி ஆகியோர் சிகிச்சைக்குப் பின்  குணமடைந்தனர். நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அதாவலேக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Tags : Corona ,India , Corona impact in India: 80 lakh increase
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...