கொங்கு மண்டலத்துக்குட்பட்ட 22 இடங்களில் வருமானவரி சோதனை

கோவை: கோவையில், 2 தினத்துக்கு முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரை கேலியாக விமர்சித்து அதிமுகவினரால் போஸ்டர் ஒட்டப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்தநிலையில், கொங்கு மண்டலத்துக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகி வீடு, அலுவலகம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் 22 பகுதிகளில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தி உள்ளனர். கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், காளப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவராகவும் இருந்தவர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன். இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சோதனையில் எந்தவிதமான முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் எதுவும் வருமான வரித்துறையிடம் கிடைக்கவில்லை. பையா கவுண்டர், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

திருப்பூர், ஈரோடு: திருப்பூர் கொங்கு நகர் புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள சுந்தர், ஸ்ரீகாந்த் என்பவர்களுக்கு சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவனம் மற்றும் அருகில் உள்ள அவர்களது வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். நள்ளிரவு வரை நீடித்த இச்சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றதாக தெரிகிறது. ஈரோடு, பெருந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் பண்ணை வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த கல்லூரியின் சென்னை அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். நாமக்கல் கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் நேற்று வருமான வரித்துறையிளர் சோதனை நடத்தினர்.

Related Stories: