×

பாலியல் தொழிலாளர்களுக்கு ஏன் உதவிகள் செய்யவில்லை? அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி:  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவில், ‘கொரோனோ ஊரடங்கால் பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி  விட்டதால், அது சார்ந்த தொழிலாளர்கள் வருமானம் இன்றி, உணவுக்கு கூட வழி இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.  அதனால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு  பிறப்பிக்க வேண்டும்,’ என கூறப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள், பொருட்கள் வழங்கும்படி  மத்திய, மாநில அரசுகளுக்கு சமீபத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.  
 
 இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘பாலியல் தொழிலாளர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய, மாநில  அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,’’ என்றார். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘‘பாலியல்  தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அது, விரைவில் அமல்படுத்தப்படும்,’’ என்றார்.  பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பாலியல் தொழிலாளர்கள் சமுதாயத்தின் மிகச்சிறிய அங்கமாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, பாதுகாப்பது அரசின் கடமை என நீதிமன்றம் தெரிவித்தும், அதை அரசு கருத்தில் கொள்ளாதது ஏன்  என்பது புரியவில்லை. இது, நீதிமன்றத்தை அலட்சியப்படுத்தும் செயலாகும். அதனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு  எவ்வாறு பின்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான பிரமாணப் பத்திரத்தை அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் 4 வாரத்தில் தாக்கல்  செய்ய வேண்டும்,’’ என தெரிவித்தனர்.


Tags : sex workers ,state ,Supreme Court , Why not help sex workers? The Supreme Court condemned the state
× RELATED உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த...