கஞ்சா விற்பனை செய்யும் தொழில்போட்டியில் பெட்ரோல் குண்டு வீசி3 பேருக்கு அரிவாள் வெட்டு: செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு  மக்கான் சந்து பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவரது நண்பர்கள் தனசேகர் (24)  சுரேந்தர் (25) ஆகியோருடன்,  நேற்று மாலை செங்கல்பட்டு சின்ன மேலமையூர் ராட்டிண கிணறு பிள்ளையார் கோயில்  அருகே கஞ்சா குடித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு  பைக்கில் வந்த சுமார் 10 பேர், கஞ்சா குடித்து கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக  காட்சியளித்தது. இதை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், அங்கிருந்த 3 பேரையும், மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால், சராமாரியாக    வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் தனசேகர், சுரேந்தர், விக்னேஷ் ஆகியோருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ரத்த  வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3  பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கஞ்சா விற்பனை செய்தில் கோஷ்டியினருக்கு ஏற்பட்ட தொழில் போட்டியால் மோதல் ஏற்பட்டு  வந்துள்ளது. இதில், முன் விரோதம் காரணமாக, எதிர் கோஷ்டியினர், பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>