×

சட்டசபை தேர்தல் வெற்றி வியூகம் குறித்து வடக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சட்டசபை தேர்தல் வெற்றி வியூகம் அமைப்பது குறித்து வடக்கு மண்டலத்தை சேர்ந்த 8 மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தலில் வெற்றி பெற நிர்வாகிகள் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக காணொளி காட்சி மூலம் நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வந்த நிலையில், அவர்களை நேரில் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டார்.

அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் மண்டல வாரியாக நிர்வாகிகளை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று காலை வடக்கு மண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து மாலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம், தொகுதி கள நிலவரம் என்ன?. தற்போதைய எம்எல்ஏக்களின் செயல்பாடு எவ்வாறு உள்ளது?. மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது.

அதிமுக அரசை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும் கேட்டறிந்தார். திமுகவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளின் விபரங்களையும் அவர்களிடம் கேட்டார். அதே நேரத்தில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதிமுகவின் மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்கள், மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்து வரும் துரோகங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி விளக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Tags : MK Stalin ,consultation ,executives ,Northern Region ,DMK ,Assembly , MK Stalin consults with Northern Region DMK executives on assembly election victory strategy
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...