பீகாரில் நடந்த முதல் கட்ட தேர்தலில் 53.24 சதவீத வாக்குகள் பதிவு: வன்முறைகள் இல்லாமல் அமைதியாக நடந்தது

பாட்னா: பீகார் மாநிலத்தில் 71 தொகுதிகளுக்கு நேற்று நடந்த முதல் கட்ட தேர்தலில் நேற்று 6 மணி நிலவரப்படி 53.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடந்தது. பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள  71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் பாதுகாப்புடன் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்கும் வகையில் இடைவெளி விட்டு வட்டமிடப்பட்டு இருந்தது.

மேலும், அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமி நாசினியும், வாக்களிப்பதற்கு கையுறைகளும் வழங்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் இருந்த போதிலும் மக்கள் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். நேற்று வாக்குப்பதிவு நடந்த 71 தொகுதிகளில், 35 தொகுதிகள் நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்தது. இதனால், அசம்பாவிதங்களை தடுப்பதற்காக தேர்தல் நடத்த அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 30 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போதே மக்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு வரத் தொடங்கினார்கள்.

மாலை 6 மணி நிலவரப்படி 53.24 சதவீத வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக கைமூரில் 55.65 சதவீத வாக்குகள் பதிவானது. லக்கிசாராயில் 55.44 சதவீத வாக்குகளும், பக்சாரில் 53.84 சதவீதம், பாகல்பூரில் 52.16 சதவீதம், பாட்னாவில் 51.02 சதவீத வாக்குகளும் பதிவானது. மத்திய அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் லக்கிசாராயில் வாக்கை பதிவு செய்தார். பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி கயாவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்கை பதிவு செய்தார். நக்சல் ஆதிக்கம் மிகுந்த 35 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் குறைக்கப்பட்டது.

வழக்கமாக, தேர்தல் என்றாலே பீகாரில் வன்முறைகள் தலைவிரித்தாடும். வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல், வாக்காளர்களை விரட்டி விட்டு குண்டர்கள் கள்ள ஓட்டு போடுவது போன்றவை சாதாரணமாக நடக்கும். அதனால்தான், கடந்த காலங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இம்மாநிலத்தில் மட்டுமே 8 கட்டங்கள் வரையில் தேர்தல் நடத்தப்பட்டு வந்தன. சமீப கால தேர்தல்களில் இவை எல்லாம் காணாமல் போய் விட்டன. தேர்தல்கள் அமைதியான முறையில் நடக்கின்றன. நேற்றைய தேர்தலும் வன்முறைகள் எதுவுமின்றி, மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது.

Related Stories: