பாஜ மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்: ஜே.பி.நட்டா அறிவிப்பு

புதுடெல்லி: பாஜவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசனை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாஜ கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சமீபத்தில் தேசிய அளவிலான பதவிகளுக்கு பலரை நியமித்தார். அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் கூட இடம்பெறவில்லை. இது அந்த கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த வாரம் டெல்லியில் முகாமிட்டிருந்த பாஜ தமிழக மாநில தலைவர் எல்.முருகன் கடந்த 2ம் தேதி அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். அப்போது அடுத்து வெளியாகும் தேசிய நிர்வாகிகளின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பாஜ கட்சியின் தலைமையில் இருந்து நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,” பாஜ கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனை (50) நியமனம் செய்து தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முன்னதாக வானதி சீனிவாசன் உள்ளிட்ட சுமார் 10 பேரை தமிழக பாஜ துணைத் தலைவராக எல்.முருகன் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பட்டியலிலும் பதவி வழங்காமல் எச்.ராஜா நிராகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: