கழிவறையில் இருந்த பச்சிளம் குழந்தையை பெற்றது யார்? பெண் பயணிகளிடம் பரிசோதனை: விமான நிலையத்தில் அதிர்ச்சி மன்னிப்பு கேட்டது கத்தார் அரசு

துபாய்: விமான நிலைய கழிவறையில் கிடந்த குழந்தையை பெற்றது யார் என்பதை கண்டறிய, விமானத்தில் பயணம் செய்த பெண்களிடம் சோதனை  நடத்தப்பட்டதற்காக கத்தார் அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. கத்தார் நாட்டில் பாலியல் முறைகேடு குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்  அளிக்கப்படுகின்றன. இங்கு தனிமனித ஒழுக்கத்தை மீறுதல், கள்ளக் காதல், வரைமுறையற்ற பாலியல் உறவுகள் பெரிய குற்றங்களாக  கருதப்படுகின்றன. இதனால், இந்நாட்டில் தகாத உறவின் மூலம் குழந்தை பெறுபவர்கள், அதை ரகசியமாக பெற்றெடுத்து மறைவான இடங்களில்  வீசும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை கண்டுபிடித்து கத்தார் அரசு கடும் தண்டனை அளிக்கிறது.

இதன் காரணமாகவே, இந்நாட்டில் திருமண ஆகாமல் அல்லது தகாத உறவின் மூலம் கர்ப்பமாகும் பெண்கள், பல மாதங்களுக்கு முன்பாகவே ரகசிய  இடங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று குழந்தையை பெற்று அங்கேயே விட்டு விட்டு நாடு திரும்புவது அதிகமாக நடக்கிறது. இந்நிலையில்,  இந்நாட்டில் உள்ள தோகா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 2ம் தேதி, கத்தார் ஏர்வேசுக்கு சொந்தமான விமானம் ஆஸ்திரேலியா  புறப்பட தயாராக இருந்தது. அப்போது, விமான நிலையத்தின் கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டு  போடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெண் பயணிகளில் யாரோ ஒருவர் தான் இதை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில்,  ஆஸ்திரேலியா புறப்பட இருந்த விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

அதில் இருந்த பெண் பயணிகளுக்கு, சில மணி நேரங்களுக்கு முன் பிரசவம் ஆனதற்காக அடையாளங்கள் இருக்கிறதா என்பதை விமான நிலைய  நிர்வாக ஊழியர்கள் சோதனை நடத்தினர்.  இந்த அதிர்ச்சி செய்தியை ஆஸ்திரேலியாவின் தனியார் தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டது.  அதில், ‘பெண் பயணிகள் ஆம்புலன்சுக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், வயது  வித்தியாசமின்றி எல்லா பெண்களின் உள்ளாடைகள் நீக்கப்பட்டு, அவர்களின் பிறப்புறுப்பு சோதனை நடத்தப்பட்டது,’ என்று கூறப்பட்டது. இது,  உலகளவில் பெரும் சர்ச்சையாகி இருப்பதால், கத்தார் அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் திருமணத்துக்கு முன்பு அல்லது திருமண உறவுக்கு  வெளியே நிகழும் பாலியல் உறவு சட்டப்படி குற்றமாக உள்ளது. இதனால், எதிர்பாராமல் கர்ப்பம் அடைகிறவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்து  வேலை பார்க்கிறவர்கள் சிறை தண்டனைக்கு பயந்து குழந்தையைத் தூக்கி வீசி விடுகிறார்கள். இதுபோன்ற சட்ட விதிகளை மீறுபவர்களை தண்டிக்க  வேண்டும் என்பதற்காகவே சோதனை நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது. தனிநபர் சுதந்திரத்தை பாதித்த நடவடிக்கை என்ற விமர்சனம் காரணமாக,  கத்தார் அரசு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. மீட்கப்பட்ட அந்த பெண் குழந்தை தற்போது மருத்துவ கண்காணிப்பில் பத்திரமாக உள்ளது.’ என்று  கூறப்பட்டுள்ளது.

‘பலாத்காரத்துக்கு இணையானது’

கத்தார் சம்பவத்தால் சர்வதேச அளவில் பெண்கள் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் கொதித்தெழுந்து உள்ளனர். கத்தார் அரசுக்கு கடும்  கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘பெண் பயணிகளிடம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனை, பாலியல் பலாத்காரத்துக்கு இணையானது’ என்று ஆஸ்திரேலிய  அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: