ஆதாயத்தை மொத்தமாக பாழாக்கியது கொரோனா: மாநிலங்கள் மீள பல ஆண்டுகளாகும்: ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்

மும்பை: கொரோனாவால் கடும் பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியுள்ள மாநிலங்கள், அதில் இருந்து மீள பல ஆண்டுகளாகும் என, ரிசர்வ் வங்கி  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  கொரோனா ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய்  இழப்பைச் சரிக்கட்ட பல்வேறு முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டன. இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள்  உயர்த்தப்பட்டன. வரி விதிப்பால் மது பானங்கள் விலையும் அதிகரித்தது. ஆனாலும் செலவுகளை ஈடுசெய்ய முடியவில்லை. கொரோனாவால்  வாழ்வாதாரத்தைத் தொலைத்த மக்கள் தலையில்தான் இந்த சுமைகள் விழுந்தன.  ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோதே, மாநிலங்களுக்கு நேரடி வரி  வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டது.

இதனால் ஏற்படும் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்ட மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், வரி வசூல் குறைந்ததைக் காரணம் காட்டி, இழப்பீடு  வழங்காமல் மத்திய அரசு கைவிரித்து விட்டது. மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் சுமார் ₹3 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என, ரேட்டிங்  நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டிருந்தன. மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு 2.35 லட்சம் கோடி மட்டும்தான் எனத் தெரிவித்த மத்திய அரசு,  ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு 97,000 கோடி மட்டுமே வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. இவற்றை வெளிச்சந்தையிலும், ரிசர்வ் வங்கி  மூலமாகவும் திரட்டிக்கொள்ள யோசனை கூறியது. மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு நிதிச்சந்தையில் கடன்  பெற்று, தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு முதல் தவணையாக 6,000 கோடி வழங்கியது.

 மாநிலங்களின் நிதி நிலை தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள ரிசர்வ்வங்கி, மாநிலங்களுக்கு கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால்  அவற்றின் மூலதன செலவுகள் வெகுவாக குறைந்து விடும். உதாரணமாக, மாநிலங்கள் கொரோனா பரவலுக்கு முன்பே பட்ஜெட் தாக்கல் செய்துள்ளன.  அதன்படி, நிகர நிதிப்பற்றாக்குறை ஜிடிபியில் 2.4 சதவீதம். கொரோனா பரவலுக்கு பின்பு மாநிலங்கள் சமர்ப்பித்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை  மாநிலங்களின் ஜிடிபியில் 4.6 சதவீதமாக உள்ளது. கொரோனா பரவல் மாநிலங்களின் கடந்த 3 ஆண்டு ஆதாயங்களை பாழடித்து விட்டது. இவை  பொருளாதார பாதிப்பில் இருந்து மீள பல ஆண்டுகளாகும் என்பதை ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.

மூலதன செலவுகள் ஜிடிபியில் 0.6 சதவீதம் சரிவு:

வருவாய் சரிவு காரணமாக, மாநிலங்களின் மூலதன செலவுகள் வெகுவாக குறைந்துள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது, மூலதன  செலவுகள் 1.26 லட்சம் கோடியை மாநிலங்கள் குறைத்துள்ளன. இது, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி  (ஜிடிபி)யில் 0.6 சதவீதம் குறைவு.  கடந்த 20 ஆண்டுகளில் இந்த அளவுக்கு மூலதன செலவுகளை மாநிலங்கள் குறைத்தது இதுவே முதல் முறை  என கருதப்படுகிறது. சராசரியாக மாநிலங்கள் ஜிடிபியில் சுமார் 0.5 சதவீதம் வீதம் மூலதன செலவுகளை குறைத்துள்ளன.

பட்ஜெட் மதிப்பீட்டிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. 10 முக்கிய மாநிலங்கள், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில்  மூலதன செலவை 35 சதவீதம் வரை குறைத்துள்ளன. வருவாய் முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ள நிலையில் சம்பளம் உள்ளிட்ட  செலவினங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, பொருளாதார பாதிப்பில் இருந்து மாநிலங்கள் மீள்வது அவ்வளவு சுலபமல்ல என்று ரிசர்வ்  வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories: