×

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும்: தொடர்களுக்கான அட்டவணை அறிவிப்பு: மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்

மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.  பாரம்பரியமான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிச. 26ம் தேதி தொடங்கும். விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி  அடுத்ததாக ஆஸ்திரேலியா சென்று ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் மாதம் தொடங்கி 2021 ஜனவரி வரை  நடைபெற உள்ள இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு  வருகின்றன. மூன்று வகை போட்டிகளுக்குமான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தொடர்களுக்கான அட்டவணையை கிரிக்கெட்  ஆஸ்திரேலியா நேற்று வெளியிட்டது.

மொத்தம் 69 நாட்கள் அடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், ஐபிஎல்  இறுதிப் போட்டி நவம்பர் 10ம் தேதி  முடிவடைந்ததும் சிட்னி பயணமாகின்றனர். அங்கு நவ. 12ம் தேதி முதல் 2 வார காலத்துக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள். கொரோனா  பரிசோதனைகளுக்குப் பிறகு முதலில் ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற உள்ளது.  முதல் 2 ஒருநாள் போட்டிகளும் சிட்னியில் நவ. 27 மற்றும்  29ம் தேதிகளில் நடைபெறும். 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பெராவில் டிச. 2ம் தேதி நடக்க உள்ளது. அனைத்து போட்டிகளுமே  பகல்/இரவு ஆட்டங்களாக நடத்தபட உள்ளன. இதைத் தொடர்ந்து, முதல் டி20 போட்டி கான்பெராவில் டிச. 4ம் தேதியும், 2வது மற்றும் 3வது  ஆட்டங்கள் டிச. 6, 8ல் சிட்னியில் நடைபெறும்.

அடுத்து இரு அணிகளும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட சவாலான இந்த  தொடரின் முதல் டெஸ்ட், அடிலெய்டில் பகல்/இரவு போட்டியாக டிச. 17-21 தேதிகளில் நடைபெறும். இளஞ்சிவப்பு நிற பந்து உபயோகிக்கப்பட உள்ள  இந்த போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் பிங்க் பந்து டெஸ்டாகும். இரு அணிகளுமே பகல்/இரவு டெஸ்டில் இதுவரை  தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி அடிலெய்டில் விளையாடிய 4 பகல்/இரவு டெஸ்டிலும் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா,  இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியுள்ளது. ஒரே ஒரு பகல்/இரவு டெஸ்டில் விளையாடி உள்ள இந்திய அணி, அதில்  வங்கதேசத்தை வென்றுள்ளது (ஈடன் கார்டன், 2019).

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் தொடங்கும் பாரம்பரியமான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் (டிச. 26-30) நடக்க உள்ளது. இந்த  போட்டியைக் காண குறிப்பிட்ட அளவிலான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இது குறித்து விக்டோரியா மாகாண  நிர்வாகத்துடன் தொடர்ந்து பேசி வருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த தொடர்கள், உலகம்  முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியா ஏ  - இந்தியா லெவன் மோதும் 2 பயிற்சி ஆட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் நியூசவுத் வேல்ஸ் (டிச. 6-8), சிட்னியில் (டிச.  11-13) நடைபெறும்.

அட்டவணை
தேதி        போட்டி    களம்
நவ. 27        முதல் ஒருநாள்    சிட்னி
நவ. 29        2வது ஒருநாள்    சிட்னி
டிச. 2        3வது ஒருநாள்    கான்பெரா
டிச. 4        முதல் டி20        கான்பெரா
டிச. 6        2வது டி20        சிட்னி
டிச. 8        3வது டி20        சிட்னி
டிச. 17-21        முதல் டெஸ்ட் (ப/இ)    அடிலெய்டு
டிச. 26-30        2வது டெஸ்ட்    மெல்போர்ன்
ஜன. 7-11        3வது டெஸ்ட்    சிட்னி
ஜன. 15-19        4வது டெஸ்ட்    பிரிஸ்பேன்Tags : Boxing Day ,Australia ,India ,clash ,Melbourne , India-Australia clash: Series schedule announced: ‘Boxing Day’ Test in Melbourne
× RELATED இந்திய அரசிடம் இன்று 6 சிலைகள்...