எளியவை அறிவோம்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

வெந்தயம் வெந்தயக்கீரை

வெந்தயக் கீரையோடு, நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கரு, தேங்காய்ப்பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும். வெந்தயக்கீரையில் இலை, தண்டு, விதை முதலியன பயன் தரும் பாகங்கள். வெந்தயம் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தும். தாய்ப்பாலை பெருக்கும். தீப்புண்ணை ஆற்றும். மது மோகத்தை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகளை பழுத்து உடையச் செய்யும். வலியை போக்கும். சர்க்கரை வியாதியைக் குறைக்கும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப்போக்கு தீரும். ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வர தாய்ப்பால் பெருகும். வெந்தயத்தை அரைத்து தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும். வெந்தயப் பொடியால் மேகம் குணமாகும். வெந்தயத்துடன் சமன் சீமையத்தியின் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.

இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து அதிகாலை வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீரிழிவு நோய் சிறிது சிறிதாக குறையும்.

முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீகைக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊறவைத்துத் தலை முழுகினால் பலன் கிடைக்கும். முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும், பருவும் குணமடையும். உடலில் ஏற்படும் உள்வீக்கம், வெளிவீக்கத்தைப் போக்கும். வெளி வீக்கத்தின் மீது வெந்தயக்கீரையை அரைத்துக் கிண்டி, வீக்கத்தின் மீது வைத்துக் கட்ட, வீக்கம் குணமாகும்.

வெந்தயக்கீரையை வேக வைத்துத் தேன் விட்டுக் கலந்து அளவாகச் சாப்பிட்டு வந்தால், மலம் எளிதாக வெளியேறும். நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும் புண்கள் குணமாகும். வெந்தயக்கீரையை ஊறவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

- கவிதா சரவணன்,

திருச்சி.

Related Stories: