×

பிரசித்தி பெற்ற தசரா விழா நடக்கும் குலசேகரன்பட்டினம்; முத்தாரம்மன் கோயில் இணையதளம் குறித்து ‘அவதூறு’ சைபர் கிரைம் போலீசார் விசாரணை

உடன்குடி: கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் நேற்றுமுன்தினம் பக்தர்கள் பங்கேற்பின்றி மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. இந்நிலையில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் வரலாற்றையும் மற்றும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்யவும், ‘‘குலசேகரபட்டினம் டெம்பிள்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே ‘குலசேகரன்பட்டினம் டெம்பிள்’ இணையதளத்தில் சில ஹேக்கர்கள் ஊடுருவி அதை ‘சர்ச்’ என்று மாற்றியுள்ளதாக கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாயின. மேலும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாற்று மதத்தினர் நிர்வாக பொறுப்பில் இருப்பதாகவும், இணையதளத்தில் பரப்பி வருவதாக தகவல்கள் பரவியது. இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரியும், உதவி ஆணையருமான ரத்தினவேல்பாண்டியன் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதில், ‘‘ குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் இணையதளம், ‘குலசேகரன்பட்டினம் டெம்பிள்’ என்ற பெயரிலேயே உள்ளது. ஆனால் சிலர் இதில் சர்ச் என்று மாற்றப்பட்டுள்ளதாக வீண் புரளியை கிளப்புகின்றனர்.

கோயில் நிர்வாகத்தின் நன்மதிப்பை சீர்குலைத்து கெட்ட பெயர் உருவாக்கும் விதமாகவும், மத உணர்வுகளை புண்படுத்தி சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் அவதூறு பரப்புகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் முனியாண்டி  505 (2), 66, 67 of IT act 2020 ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kulasekaranpattinam ,festival ,Cyber crime police ,Dasara ,Mutharamman , Kulasekaranpattinam where the famous Dasara festival is held; Mutharamman temple website 'slander' cyber crime police investigation
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...