×

7 மாதத்திற்கு பிறகு ஏற்காட்டிற்கு இன்று முதல் பஸ்கள் இயக்கம்: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சேலம்: கொரோனா தொற்று காரணமாக ஏழு மாதத்திற்கு பிறகு ஏற்காட்டிற்கு இன்று முதல் பஸ்கள் இயக்கம் தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது ஏற்காடாகும். இங்கு ஏரி, படகு இல்லம், மான் பூங்கா, அண்ணா பூங்கா, சேர்வராயன் கோயில், பக்கோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, தலைச்சோலை உள்ளிட்ட இடங்கள் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களாகும். ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கோடை விடுமுறை காலங்களில் கர்நாடகா, தமிழகத்தில் பல பகுதிகளி லிருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை நம்பி ஏற்காட்டில் நூற்றுக்கணக்கான ரெஸ்டாரண்ட், காட்டேஜ், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன.

இதைதவிர வாடகை டெம்போ, கார்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதன் காரணமாக ஏற்காடு சுற்றுலா தலம் மூடப்பட்டது. இதனால் ஓட்டல், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்களுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. கொரோனாவால் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஏற்காட்டிற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் பத்தும், தனியார் பேருந்து நான்கும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சுற்றுலா தலங்கள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த மாதம் முதல் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. எனினும் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. கார், வேன், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது.

ஏற்காட்டில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்கள் பல்வேறு வேலைக்காக அடிவாரத்திற்கு வருகின்றனர். பஸ் வசதி இல்லாததால், அவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சேலத்தில் இருந்து வழக்கம்போல் ஏற்காட்டிற்கு பஸ்கள் இயக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு போக்குவரத்த கழகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், அரசு போக்குவரத்து கழகம் இன்று முதல் ஏற்காட்டிற்கு பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் ஏற்காட்டிற்கு அரசு பஸ்கள் ஆறும், தனியார் பஸ் நான்கும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. ஏழு மாதத்திற்கு பிறகு ஏற்காட்டிற்கு பஸ்கள் இயக்கியதால், அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Yercaud , First buses to Yercaud today after 7 months: Public, tourists happy
× RELATED ஏற்காட்டில் பரபரப்பு போலி சான்றிதழ்...