×

இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் டவுன் காய்கறி மார்க்கெட்: அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் திண்டாட்டம்

நெல்லை: நெல்லை டவுன் பொருட்காட்சி மைதானம் அருகேயுள்ள காய்கறி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் திண்டாடுகின்றனர். அங்கு 38 கடைகள் இடநெருக்கடியில் இயங்கி வருகின்றன. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் அருகே செயல்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காய்கறி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக இடிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து கடைகள் அனைத்தும் பொருட்காட்சி மைதானத்திற்கு மாற்றப்பட்டன. பொருட்காட்சி மைதானத்திலும் வர்த்தக மையம் பணிகள் தொடங்கியதால், மார்க்கெட் கடைகள் தற்போது நெல்லை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இயங்கி வருகின்றன.

மொத்தம் 86 கடைகள் அங்குள்ள நிலையில் 50 கடைகளுக்கு மட்டுமே இடவசதி உள்ளது. மீதமுள்ள 36 கடைகளும் தனிநபர் நுழையவே வழியில்லாத சூழலில் இடநெருக்கடியில் காணப்படுகின்றன. அங்கு கடைகளில் வியாபாரிகள் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்யவும் முடியவில்லை. மார்க்கெட் இடநெருக்கடி காரணமாக தரை வாடகை வியாபாரிகளில் பலர் பார்வதி சேஷமகால் அருகேயுள்ள இடத்திற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் பொருட்காட்சி மைதானத்தில் இயங்கி வரும் 86 கடைகளுக்கும் மாநகராட்சி சார்பில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. முறையான கழிப்பிடம், குடிநீர் வசதிகளும் இல்லை.

டவுன் மார்க்கெட் தற்போதைய இடத்திற்கு இடம் பெயர்ந்தபோது, மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர் இரண்டே கால் ஏக்கரில் இடம் ஒதுக்கி தருவோம். 2 செக்யூரிட்டிகள் நியமிப்போம். சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பி தருவோம் என வாக்குறுதிகளை அள்ளிவிட்டனர். ஆனால் அதில் எதையுமே இன்று வரை நிறைவேற்றவில்லை. நெல்லை டவுனை பொறுத்தவரை காய்கறிகள் வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தாலும், இடநெருக்கடி காரணமாக பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக எம்எல்ஏ அலுவலகம் அருகே திருப்பங்களில் வாகனங்கள் வந்து செல்ல வசதிகள் இல்லை. அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் வாகனங்கள் செல்ல இயலாதவாறு தடுக்கின்றன.

மார்க்கெட்டிற்குள் செல்லும் சாலையும் படுமோசமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து டவுன் மார்க்கெட் வியாபாரி அழகேசன் கூறுகையில், ‘‘டவுன் காய்கறி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. முகப்பு பகுதியில் தெருவிளக்கு வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை மாநகராட்சியில் முறையிட்டுள்ளோம். சுமார் 36 கடைகள் வியாபாரம் செய்ய வழியின்றி தவிக்கின்றன. வாகனங்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் போதிய இடவசதிகள் இல்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டை ஆய்வு செய்து, இடநெருக்கடியை தீர்க்க வேண்டும்’’ என்றார்.



Tags : Crisis Town Vegetable Market: Lack of basic amenities
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!