×

கன்னியாகுமரி வெறிச்சோடியது

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் மற்றும் கோடைகால சீசனில் சுற்றுலா பயணிகளின் வரத்து மிக அதிகமாக காணப்படும். இந்நேரங்களில் இங்கு வியாபாரமும் களைகட்டும். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தராமல் வெறிச்சோடி காணப்பட்டது.

படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து கன்னியாகுமரி களைகட்ட தொடங்கியது. பின்னர் மழை, சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது. இந்த நிலையில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து கன்னியாகுமரி களையிழந்து காணப்படுகிறது. நேற்றும், இன்றும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து மிகவும்  குறைந்துள்ளது. ஒரு சில வடநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே அவ்வப்போது வந்து செல்கின்றனர்.

இதனால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்தும் இன்று காலை தொடங்கப்படவில்லை. திரிவேணி சங்கம கடற்கரை, காந்தி, காமராஜர் மணிமண்டபங்கள், கடற்கரை சாலை என சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்படும் இடங்கள் வெறிச்சோடின. சுற்றுலா பயணிகள் அனுமார் வால்போல நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து படகு டிக்கெட் வாங்கும் இடமும் காற்று வாங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி கன்னியாகுமரி களையிழந்து, வெறிச்சோடி காணப்படுகிறது. வியாபாரமும் மந்தமாகி விட்டதால் வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.


Tags : Kanyakumari , Kanyakumari was deserted
× RELATED கன்னியாகுமரி மக்களவை தேர்தல்-...