×

ஈரோடு அக்ரஹாரம் தடுப்பணையில் பச்சை நிறமாக மாறிய ஆற்று நீர்: ரசாயன கழிவு கலப்பு என குற்றச்சாட்டு

ஈரோடு: ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் அடர் பச்சை நிறமாக மாறியுள்ளது. ஆற்றில் ரசாயன கழிவு கலந்துள்ளதே காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஓடும் காவிரி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு, நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளில் 2 யூனிட்கள் மூலம் தலா 15 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும். இந்த தடுப்பணைகளுக்கு அருகிலேயே குடிநீர் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஆற்றில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தடுப்பணைகளில் மின் உற்பத்திக்காக ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில், பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர், அடர் பச்சை நிறமாக மாறி, துர்நாற்றம் வீச துவங்கி உள்ளது. ஆங்காங்கே மீன்களும் செத்து மிதந்து வருவதால், இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து காலிங்கராயன் பாசன விவசாயிகள் சபை தலைவர் வேலாயுதம் கூறுகையில், காவிரி ஆற்றில் சுற்றுப்புற பகுதிகளின் சாக்கடை கழிவு நீர் ஓடை வழியாக கலந்து வருகிறது. தற்போது, பி.பெ. அக்ரஹாரம் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், கழிவு நீரில் சாயக்கழிவு மற்றும் ராசாயண கழிவுகளும் சேர்ந்து தண்ணீர் முழுவதும் பச்சை நிறமாக மாறியுள்ளது.

இந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்தாலும், பயன்படுத்த முடியாது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை வெளியேற்றிட வேண்டும். ஆற்றில் தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றும் ஆலையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags : dam , River water turns green at Erode Agraharam dam: Accused of mixing chemical waste
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்