×

தேர்தலில் தோற்றவர் பஞ்சாயத்து தலைவரான விவகாரம்; வெற்றி பெற்றவருக்கு ஒரு வாரத்திற்குள் பதவி: மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் அதிகாரி செய்த தவறால் உள்ளாட்சி தேர்தலில் குறைந்த வாக்குகள் பெற்றவர் பஞ்சாயத்து தலைவராக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்த உயர் நீதிமன்றம் அதிக வாக்குகள் பெற்றவரை பஞ்சாயத்து தலைவராக அறிவிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட குமலன்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு கடந்த 2019 டிசம்பரில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஜெயலட்சுமி என்பவருக்கு ‘’ஆட்டோ’’ சின்னமும், விஜயலட்சுமி என்பவருக்கு ‘’பூட்டு சாவி’’ சின்னமும் ஒதுக்கப்பட்டது.

 டிசம்பர் 27ம் தேதி வாக்கு பதிவு நடந்து ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் ஜெயலட்சுமி 2524 வாக்குகள் பெற்றிருந்தார். விஜயலட்சுமி 1478 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால், தேர்தலில் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் அதிகாரியின் இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி ெஜயலட்சுமி தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியும் பலனில்லை. இதையடுத்து, விஜயலட்சுமியை பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்ததை ரத்து செய்யக்கோரியும் தன்னை தலைவராக அறிவிக்க கோரியும் ஜெயலட்சுமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, தன்னை பதவி ஏற்க தேதி அறிவிக்கக்கோரி விஜயலட்சுமியும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: தேர்தல் வழக்குகளில் பெரும்பாலும் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை. அதே நேரத்தில் தேர்தலில் சட்ட விரோதம் நடந்திருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடுவது தவிர்க்க முடியாது. இந்த வழக்கில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட மனுதாரர் ஜெயலட்சுமி அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.  ஆனால், அவரை விட குறைந்த வாக்குகள் பெற்ற எதிர்மனுதாரரான விஜயலட்சுமி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்கு முரணாக இந்த தேர்தல் நடந்துள்ளது என்று மனுதாரர் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்திய உதவி தேர்தல் அதிகாரியான கடலூர் ஊராட்சி ஒன்றிய இணை வட்டார வளர்ச்சி அதிகாரி, சின்னம் மாற்றம் குறித்து தெளிவாக தனது கருத்தை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளதை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. தேர்தலில் குளறுபடிகள் நடந்துள்ளதை மனுதாரர் தரப்பு தெளிவாக விளக்கியுள்ளது. எனவே, விஜயலட்சுமி குமலன்குளம் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றார் என்று அறிவித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதிக வாக்குகள் பெற்ற ஜெயலட்சுமி வெற்றிபெற்றதாக  மாநில தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Tags : Winner ,ICC ,State Election Commission , Loser panchayat leader affair; Winner's post within a week: ICC order to the State Election Commission
× RELATED போராட்டம் நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய ஐகோர்ட்டில் முறையீடு