சிந்தியா-பைலட் திடீர் சந்திப்பு: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

குவாலியர்: குவாலியரில் நெருங்கிய நண்பர்களான பாஜகவை சேர்ந்த சிந்தியாவும், காங்கிரசை சேர்ந்த சச்சின் பைலட்டும் திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதம் காங்கிரசை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய பிரதேச இடைத்தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தனது முன்னாள் நண்பனும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சச்சின் பைலட்டை  குவாலியரில் சந்தித்தார். முன்னதாக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக குவாலியர் - சம்பல் பிராந்தியத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணமாக சச்சின் பைலட் ராஜஸ்தானில் இருந்து குவாலியர் வந்தார். தற்போது இருவரும் சந்தித்த செய்தி, மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஜோதிராதித்யா சிந்தியா கூறுகையில், ‘நான் அவரை (சச்சின் பைலட்) குவாலியரில் சந்தித்தேன். குவாலியர் அரச குடும்பத்தின் வம்சாவளியான நான், இந்த மண்ணை சேர்ந்த அவரை வரவேற்றேன். இந்த பாரம்பரிய முறை மத்திய பிரதேசத்தில் உள்ளது. எனவே அவர்கள் (சச்சின் குடும்பத்தினர்) இங்கு வரவேற்கப்படுகிறார்கள். காங்கிரசுக்கு ஆதரவாக சச்சின் பைலட் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர், ஜனநாயக அடிப்படையில் அவரது கட்சிக்கு பிரசாரம் செய்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ராஜஸ்தானின் அரசியல் நெருக்கடிக்கு முன்னர் நான் சச்சின் பைலட்டை சந்தித்தது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்றார்.

Related Stories: