கேரள தங்கம் கடத்தல் வழக்கு; மேலும் 7 பேர் மீது காபிபோசா சட்டத்தில் வழக்கு: சுங்க இலாகா முடிவு

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள சொப்னா கும்பல் குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தூதரக பார்சல் மூலம் துபாயில் இருந்து தங்கம் கடத்த கடந்த ஆண்டு ஜூலை முதல் 2 முறை ஒத்திகை பார்த்து உள்ளனர். இந்த ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து 5 முறை எந்த சிரமமும் இல்லாமல் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி இருக்கின்றனர். அதிகபட்சமாக 10 கிலோவுக்கு மேல் தங்கத்தை கடத்த வேண்டாம் என்று சொப்னா, ரமீஸிடம் கூறி உள்ளார். ஆனால் அதற்கு மேலான எடையில் தங்கத்தை கடத்தி வந்து உள்ளார். கடைசியாக தங்கம் வந்த பார்சலில் 18 கிலோ இருப்பதாக சொப்னாவிடம் ரமீஸ் கூறியிருந்தார்.

ஆனால் 30 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. ஒரு கிலோவுக்கு குறிப்பிட்ட தொகையை சொப்னாவுக்கு கமிஷனாக கொடுக்க வேண்டும் என்பதால், அவரை ஏமாற்ற ரமீஸ் இவ்வாறு செய்துள்ளார்.  இதனால் தான் இந்த வழக்கில் ரமீஸுக்கு தொடர்பு இருப்பது குறித்த விவரத்தை சொப்னா கூறியதாக தெரிகிறது. இதற்கிடையே சொப்னா ஏற்கனவே சுங்க இலாகா, அமலாக்கத்துறை விசாரணையில் இதை தெரிவித்துள்ளார். இவ்வாறு கூடுதல் எடையில் தங்கம் கடத்தியபோதுதான் 2 முறை துபாய் சுங்க இலாகா அதை தடுத்து நிறுத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இது நடந்துள்ளது. சந்தேகம் அடைந்த துபாய் சுங்க இலாகா, திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து சிலமாத இடைவெளிக்கு பிறகு, மீண்டும் தங்கம் கடத்தும் பொறுப்பை தாவூத் அல் அரபி ஏற்றுக்கொண்டதாக ரபின்ஸ் ஹமீது என்ஐஏயிடம் நேற்று தெரிவித்துள்ளார். ஆனால் தாவூத் அல் அரபி யாரென இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. கடைசியாக தங்கம் சிக்கிய போது ஒரு மலையாளி அதை சரியாக கவனித்து கொள்வார் என தன்னிடம் தூதரக அட்டாஷே பொறுப்பில் உள்ள அதிகாரி கூறியதாக சொப்னா விசாரணையில் தெரிவித்திருந்தார். எனவே அந்த மலையாளிதான் தாவூத் அல் அரபியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே ரபின்ஸ் ஹமீதை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே ரபின்ஸ் ஹமீதிடம் நடத்திய விசாரணையில், என்ஐஏவால் தகவல்களை பெற முடியவில்லை. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, முக்கிய பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தங்கம் கடத்தலில் தொடர்புடைய சரித்குமார், ரமீஸ், ரபின்ஸ் ‌ஹமீது உள்பட 7 பேருக்கு எதிராக காபிபோசா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. ஏற்கனேவே சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் மீது காபிபோசா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவசங்கர் மனு மீது இன்று தீர்ப்பு

தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீது சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், அவர் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ெசய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது சுங்க இலாகா மற்றும் அமலாக்கத்துறை சிவசங்கருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இதுதொடர்பான தீர்ப்பை இன்று (28ம் தேதி) வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதுவரை சிவசங்கரை கைது செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: