கொரோனா பரவலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு விளம்பர வாகனங்கள் : முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் செய்யக் கூடியது மற்றும் செய்யக் கூடாது தனிமைப் படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், மனநல ஆலோசனை, பொதுமக்களுக்கு கொரோனா நோயாளியின் அறிவுரை, முகக்கவசம் அணிதலின் அவசியம், அடிக்கடி கை  கழுவுதல் மற்றும் தனி மனித இடைவெளியை கடைபிடித்தலின் அவசியம் போன்ற கொரோனா தொடர்பான 54 விழிப்புணர்வு குறும்படங்கள், குறும்பாடல்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் பிற துறைகளால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவிட்-19க்கு எதிரான 33 எண்ணிக்கையிலான மக்கள் இயக்க விழிப்புணர்வு விளம்பர வாகனங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் இன்று 7 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் குறும்பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை முதல்வர் வெளியிட அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ பெற்றுக்கொண்டார்கள். மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் எல்.இ.டி. விளம்பர வாகனத்தில் ஒளிபரப்பப்பட்ட கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு குறும்பாடல்களை, கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை  செயலாளர் மகேசன் காசிராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர்  பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: