போதைக்கு இளைஞர்கள் அடிமை; ரூ5 வலி நிவாரண மாத்திரையை ரூ700க்கு விற்று கொள்ளை லாபம்

* மெடிக்கல் ஷாப் உரிமையாளர் கைது

* கொடுங்கையூரில் பரபரப்பு

பெரம்பூர்: இளைஞர்களுக்கு போதைக்காக ரூ.5 மதிப்பிலான வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை ரூ.700க்கு விற்று கொள்ளை லாபம் அடித்த மெடிக்கல் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூரில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சமீப காலமாக கஞ்சா பயன்படுத்தும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவற்றை போலீசார் கண்காணித்து, கஞ்சா விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், போதைக்கான மாற்று வழியை சிறுவர்கள், இளைஞர்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். எதை சாப்பிட்டால் போதை அதிகமாகும் என்ற வழிகளை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் சில மருந்துகளையும் உட்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள், வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் வலியை போக்கக்கூடிய மருந்துகள் உள்ளிட்ட பல மருந்துகளை மெடிக்கல் கடையில் வாங்கி பயன்படுத்துவதாகவும், அந்த மருந்துகளுக்கு டாக்டரின் ஒப்புதல் சீட்டு இல்லாமல் பல மெடிக்கல் கடை உரிமையாளர்கள் கூடுதல் விலைக்கு இளைஞர்களுக்கு சிறுவர்களுக்கும் விற்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கொடுங்கையூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கஞ்சா புகைத்த ஒரு இளைஞரை பிடித்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் குரூஸ் விசாரித்தார். அவர், ‘தான் கஞ்சா புகைப்பது இல்லை’ என்று கூறியுள்ளார்.

ஆனால் அவனது பேச்சிலும் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, துருவி துருவி விசாரணை நடத்தியதில், வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டது தெரிந்தது. உடனே, அந்த சிறுவன் மூலம், சம்பந்தப்பட்ட மெடிக்கல் கடையை கண்டுபிடிக்கும் பணியில் கொடுங்கையூர் போலீசார் களத்தில் இறங்கினர். அதன்படி அந்த சிறுவனிடம் பணத்தை கொடுத்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வருமாறு போலீசார் கூறினர். அவனும், பணத்துடன், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5வது மெயின் ரோட்டில் உள்ள மெடிக்கல் கடைக்கு சென்றான். அங்கு, ரூ.5 மதிப்புள்ள ஒரு மாத்திரையை ரூ.700 கொடுத்து வாங்கினான். அந்த நேரத்தில், மறைந்திருந்த போலீசார், அதிரடியாக கடைக்குள் நுழைந்தனர்.

இதனால் கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். கடையில் சோதனை செய்தபோது, அளவுக்கு அதிகமாக வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரிந்தது. இதனையடுத்து, அங்கிருந்த 170 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 25க்கும் மேற்பட்ட வலி நிவாரண மருந்துகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் மெடிக்கல் கடை நடத்தி வருபவர் செங்குன்றம் சோலையம்மன் நகரை சேர்ந்த மோகன் (30) என்பதும், மருத்துவரின் ஒப்புதல் சீட்டு இல்லாமல் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் மருந்துகளை விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து மோகனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் பெரும்பாலும் பெண்களின் பிரசவ வலிக்கு பயன்படுத்தப்படும் என்றும் அதிகப்படியான வலியை தாங்கி கொள்வதற்காக பயன்படுத்தும் மருந்துகளை போதைக்காக சில இளைஞர்கள் பயன்படுத்துவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories:

>