வளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர்: 2-ம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

தர்பங்கா: பீகாரில் மாநில வளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தர்பங்காவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்; நிதிஷ் குமார் தலைமையிலான அரசு பீகார் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் செலுத்தி இருப்பதாக தெரிவித்தார். மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளை விவசாயிகள் அடைந்திருப்பதாக கூறிய பிரதமர், 90 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் எரிவாயு  வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பீகார் மாநில வளர்ச்சியை சூறையாடியதாகவும், அவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராகி விட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Related Stories: