×

பொள்ளாச்சி அருகே கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்காமல் அதிகாரிகளின் அலட்சிய போக்காக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருக்கும் நீரேற்று நிலையம் மூலம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளுக்கு மட்டுமின்றி குறிச்சி, குனியமுத்தூர் பகுதிக்கும்.
வழியோரக கிராமங்கள் மற்றும் பேரூராட்சி பகுதி மக்களுக்கு தேவைக்காக பிரதான குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அம்பராம்பாளையம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாயானது பல ஆண்டுக்கு முன்பு இரும்பால் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த குழாயில் துறுபிடித்து ஆங்காங்கே உடைப்பு ஏற்படுவது இன்னும் தொடர்ந்துள்ளது.

அதிலும் குறிச்சி, குனியமுத்தூர் பகுதிக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்படுவதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முறையாக சீரமைக்காமல் இருப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டு எழுகிறது. இந்த நிலையில், ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணாகுளம் அருகே நல்லூர் செல்லும் ரோட்டோரம் உள்ள பாலத்தின் ஒரு பகுதியில் குறிச்சி, குனியமுத்தூர் கூட்டுக்குடிநீரானது பிரதான குழாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த பாலத்தில் உள்ள ராட்சத இரும்பு குழாயானது கடந்த 10 ஆண்டுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிய ஆரம்பித்தது. அந்நேரத்தில், சிறிய அளவிலான உடைப்பை அதிகாரிகள் சரிசெய்தனர். ஆனால் நாள்போக்கில், அந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சிறுசிறு ஒட்டுபோட்டு அதிகாரிகள் சமாளித்துள்ளனர். இதற்கிடையே, கடந்த சில வாரத்திற்கு முன்பு, பிரதான குழாயில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அதில் ஒரு இடத்தில் பெரிய அளவிலான உடைப்பால் தண்ணீர் பீரிட்டு வெளியேறுவது தொடர்ந்தது.

அதிக அழுத்ததுடன் தண்ணீர் செல்வதால், குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பிலிருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது தொடர்ந்துள்ளது. கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் குடிநீர் வீணாவதை அதிகாரிகள் கண்டும், காணாததுபோல் இருப்பதாகவும். அலட்சியபோக்கு காட்டவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் விரயமாவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், முழுமையாக குழாய் உடைப்பு ஏற்படுவதற்குள் புதிய தரமான குழாய் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pollachi ,drinking water project , Pollachi, drinking water
× RELATED புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்காக...