×

அரிசி ஆலை நெல் ஊற வைக்கும் டேங்கில் விழுந்து தொழிலாளி பலி

தாராபுரம்: தாராபுரம் அருகே அரிசி ஆலை நெல் ஊற வைக்கும் டேங்கில் விழந்து தொழிலாளி பலியானார். 2 நாட்களுக்குப் பின் சடலம் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பூளவாடி செல்லும் சாலையில் செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இங்கு திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த ஜீவானந்தம் (47) தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆலையில் நெல் ஊற வைத்த டேங்கரில் இருந்து கருக்காய் பதர்களை பிரித்தெடுக்கும் பணியில் ஜீவானந்தம் ஈடுபட்டார். இந்தநிலையில் ஜீவானந்தத்தை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து வேறு தொழிலாளர்கள் மூலம் நேற்று நெல் ஊற வைக்கும் பணிக்காக இயந்திரங்களை தயார் செய்தபோது அங்கிருந்த நெல் ஊறல் டேங்கிற்குள் தொழிலாளி ஜீவானந்தம் உடல் கிடந்தது தெரிய வந்தது.

இத்தகவலறிந்த தாராபுரம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவயிடம் வந்து நெல் ஊறல் டேங்குக்குள் சடலமாக கிடந்த ஜீவானந்தத்தின் உடலை கயிறு கட்டி மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 நாள் முன் நெல் ஊற வைக்கும் பணியின்போது கால் தவறி டேங்கில் விழுந்த ஜீவானந்தம் டேங்கில் இருந்து தப்பிக்க எவ்வித பிடிமானமும் இல்லாததால் நெல் ஊறல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது. தொழிலாளி ஜீவானந்தத்திற்கு சுதா (35) என்ற மனைவியும், சஞ்சீவி(12) என்ற மகனும் ஷிவானி என்ற மகளும் உள்ளனர். தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Rice mill worker , Rice mill, paddy
× RELATED யானை தாக்கி விவசாயி பலி