×

வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்..!!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாகவும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்குள் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை, இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் துவங்கியது. அந்தமான், கேரளா, தமிழகம், கர்நாடகா என, பல மாநிலங்களுக்கும் பரவி, வட மாநிலங்களில் கொட்டியது. மும்பை, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா, வடகிழக்கு மாநிலங்களில் கன மழையாக கொட்டி, வெள்ள பெருக்கையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தெற்கு தீபகற்ப பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகி விட்டது என்றும் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பருவ காலம், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு முக்கியமானது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கும், தெற்கு ஆந்திர பகுதிகளுக்கும், ஒரு ஆண்டுக்கு தேவையான நீராதாரத்தை, வடகிழக்கு பருவ மழை வழங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Indian Meteorological Center , Northeast Monsoon, Chance, Indian Meteorological Center, Information
× RELATED வடகிழக்கு பருவமழைக்கான...